Published : 18 Jun 2014 06:10 PM
Last Updated : 18 Jun 2014 06:10 PM

தென் மாவட்ட தி.மு.க.வில் இனி என்ன நடக்கும்?

மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அமைப்புரீதியான மாற்றங்களைச் செய்துள்ளது தி.மு.க. 34 மாவட்டங்களாக இருந்த கட்சி, 65 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படும் முன்பே, அடுத்த மாவட்டச் செயலர்கள் யார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

மதுரை

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரையில், மதுரை வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம், மாநகர் வடக்கு மாவட்டம், மாநகர் தெற்கு மாவட்டம் என்று 4 மாவட்டங்களாக கட்சி பிரிக்கப்பட்டுள்ளது. தனது தோல்விக்கான காரணங்களை அடுக்கி, வ.வேலுச்சாமி தி.மு.க. தலைமைக்கு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சிலரது பதவிகள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநகர் மாவட்டச் செயலர் (பொறுப்பு) கோ.தளபதி, இதன் மூலம் மாவட்டச் செயலர் பி.மூர்த்தி ஆகியோரின் ஆளுகைப்பரப்பு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

பி.மூர்த்தியின் சொந்த ஊரான வெளிச்சநத்தமும், தற்போது குடியிருக்கும் அய்யர்பங்களாவும் மதுரை வடக்கு மாவட்டத்தில் வருகிறது. அதேபோல கோ.தளபதியின் சொந்த ஊரான திருப்பரங்குன்றமும், அவர் ஏற்கெனவே போட்டியிட்ட சேடபட்டி பகுதியும் மதுரை தெற்கு மாவட்டத்தில் வருகிறது. ஆக இவர்கள் தங்கள் பகுதியிலேயே மாவட்டச் செயலர்கள் ஆகிவிடுவர். மாநகர் தெற்கு மாவட்டச் செயலர் பதவியை முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மா.ஜெயராம் கைப்பற்றுவார் என்கிறார்கள். இந்தப் பகுதி இஸ்லாமியர் அதிகமுள்ள பகுதி என்பதால், அவனியாபுரத்தைச் சேர்ந்த இப்ராகிம் சுலைமான் சேட் உள்ளிட்டவர்களும் போட்டியில் இறங்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல மாநகர் வடக்கு மாவட்டச் செயலர் பதவிக்கு முன்னாள் மாநகர் செயலர் வ.வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மகன் பொன்.சேது ஆகியோரிடையே போட்டி வரலாம்.

கட்சிக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் உணர்வுள்ள தொண்டர்கள் பலர் இருந்தாலும், செலவழிக்கும் சக்தியுள்ளவர்கள்தான் மாவட்டச் செயலர் பதவிக்கு போட்டியிடவே முடியும் என்பதுதான் யதார்த்தம். இருந்தாலும், கடந்த காலத்தில் குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்தவர்களை எல்லாம் களையெடுக்க வேண்டும், மீண்டும் அழகிரியின் கை ஓங்கினால்கூட அவரை எதிர்த்து அரசியல் செய்யும் துணிச்சல் உள்ள இளைஞர்களுக்கே பதவி தர வேண்டும் என்பது தி.மு.க.வினர் கோரிக்கையாக உள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட தி.மு.க. தற்போது விருதுநகர் கிழக்கு, மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாவட்டத்தில் திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளும், மேற்கு மாவட்டத்தில் சிவகாசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் வருகின்றன.

மாவட்டப் பிரிப்புக்கு முன்னரே, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தங்கம் தென்னரசும் ‘ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்’ போட்டுக் கொண்டனர் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். அதன்படி, சாத்தூர் அடங்கிய மேற்கு மாவட்டச் செயலர் பதவியை கே.கே.எஸ்.எஸ்.ஆர். எடுத்துக்கொண்டு, திருச்சுழி அடங்கிய கிழக்கு மாவட்டத்தை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைத்துவிடுவார் என்கிறார்கள்.

இந்த மாற்றம் கட்சியைப் பலப்படுத்த உதவுமா? என்றால் நிச்சயம் இல்லை என்கிறார்கள் தி.மு.க.வினர். "கே.கே.எஸ்.எஸ்.ஆர். செயல்வீரர் தான். ஆனால், மாவட்டத்தில் அதிகமாக உள்ள தேவர், நாயுடு, நாடார் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காததால், கட்சி தேய்ந்துவிட்டது. இனியும் அதில் மாற்றமிருக்காது போலத்தான் தெரிகிறது.

தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் கட்டுப்பாட்டில் இருப்பவர். அவரை மீறி எதுவும் செய்யமாட்டார். மேற்கு மாவட்ட செயலராகி 4 சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆட்சி செய்யப்போகும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தனது வீடு அமைந்திருக்கும் விருதுநகர் தொகுதியிலும், தன்னுடைய சொந்த ஊரான பாலையம்பட்டி அமைந்துள்ள அருப்புக்கோட்டை தொகுதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்.

மாவட்டச் செயலாளர் ஆன பிறகும்கூட தங்கம் தென்னரசுவால் திருச்சுழியைத் தாண்டி கட்சி வளர்ச்சிப் பணியில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய்விடும்" என்கின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. கிழக்கு, மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும், மேற்கில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய 3 தொகுதிகளும் வருகின்றன. மாவட்டச் செயலர் ஐ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலராகவே நீடிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

இளைஞர்தான் இருக்க வேண்டும் என்று மேலிடம் வலியுறுத்தினால், தன் மகன் செந்தில்குமாரை அப்பதவியில் அமர்த்திவிட்டு, மாநில பதவிக்குப் போய்விடுவார் என்கிறார்கள்.

முடிசூடா மன்னர்கள்

தற்போது ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அர. சக்கரபாணி மேற்கு மாவட்டச் செயலர் பதவிக்குப் போட்டியிடுவார்.

இந்த மாற்றம் உங்களுக்குத் திருப்திதானா என்று கட்சி நலனில் அக்கறையுள்ள ஒருவரிடம் கேட்டபோது, கட்சியைப் பலப்படுத்தவும், புதியவர்களை பொறுப்புக்கு கொண்டுவந்து அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவுமே இந்த மாற்றம் என்று தலைமை சொல்கிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில் கிளைச் செயலர் முதல் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலர்கள் வரை 50 வயதுக்கும் மேற்பட்டவர்களே முடிசூடா மன்னர்களாக இருக்கிறார்கள்.

மாவட்டச் செயலர் பதவிக்கும் ஏற்கெனவே அதிகாரத்தில் உள்ளவர்களே வரும் வாய்ப்பு உள்ளது. கட்சியில் துடிப்பான இளைஞர்களுக்கு மீண்டும் முக்கியப் பொறுப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது.

எனவே, மாவட்டத்தைப் பிரித்ததுபோல பெரிய ஒன்றியங்களையும் இரண்டாகப் பிரித்து புதியவர்களுக்கு பதவி தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x