Published : 26 Nov 2016 03:12 PM
Last Updated : 26 Nov 2016 03:12 PM
ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தங்களின் அரசு பணி கனவை நனவாக்க உதவி வருகிறது தன்னார்வ பயிலும் வட்டம். தமிழ்நாடு அரசு தேர்வாணையம், மத்திய அரசு தேர்வாணையம் அறிவிக்கும் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், கிராமப்புற மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் களால் இந்த பயிற்சி மையங் களில் சேர முடியாத நிலை உள்ளது.
இவர்களுக்கு உதவும் வகை யில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் களில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இங்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
இது குறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளைஞர் நல வேலைவாய்ப்பு பிரிவு அலுவலர் தொண்டீஸ்வரன் கூறியது:
தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுக்கு தேவையான நூல்களை வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அரசு நிதி வழங்குகிறது. போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும், இதழ்களும் மாதந்தோறும் வாங்கி தருகிறோம். ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியிலுள்ளவர்கள் எழுதிய போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கியுள்ளோம். சிபிஎஸ்இ, சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான புத்தகங்களை வாங்கி வைத்துள்ளோம்.
மேலும், போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரில் அழைத்து வந்து இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறோம். போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது முதல் 4 மாதங்களுக்கு முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்வம், தேடலுடன் படித்தால் 6 மாதப் பயிற்சிக்கு பின் ஏதாவது ஒரு தேர்வில் கட்டாயம் வெற்றிபெற முடியும். புதுக்கோட்டை, திருச்சி உள் ளிட்ட வெகுதூரத்தில் இருந்தும் கூட, இப்பயிற்சி மையத்துக்கு இளைஞர்கள் வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் தன்னார்வ பயிலும் வட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த 2011 முதல் தற்போதுவரை இங்கு பயிற்சி பெற்ற 327 பேர் குரூப் 2, 4 பிரிவு பணியிடங்கள், காவல்துறை உதவி ஆய்வாளர் பணி உட்பட பல்வேறு அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT