Published : 14 Sep 2022 11:08 PM
Last Updated : 14 Sep 2022 11:08 PM
சென்னை: `இந்தி திவாஸ்' தினத்தையொட்டி குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள அலுவல் மொழியான இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "கலாச்சாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மொழிகளை பேசும் மக்களை கொண்ட இந்திய ஒன்றியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டுக்கு நேர்எதிரானது. இந்தி என்கிற மொழி உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மையாக கொண்ட திராவிட மொழிக் குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பரப்பையும் அதன் எல்லைகளையும் கடந்து பரவியிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
அத்தைகையை சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளை காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கிற ஆங்கிலம். அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால்தான் செம்மொழியான தமிழ் மொழியை ஆதிக்க மொழி ஆடுகளால் மேய முடியவில்லை.
இந்தி மொழியால் மட்டுமே இந்திய மக்களை ஒன்றிணைக்க முடியும் என்ற தவறான கருத்தை மத்திய பாஜக அரசு திணித்து வருகிறது. இந்தி மொழி மீதான முன்னுரிமை பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களிடையே தேவையற்ற அதிருப்தியை உருவாக்கி அவர்களைப் பிரிக்கிறது.
இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை `ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்தி பார்க்கும் முயற்சிகள் வேண்டாம். உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழியாக விரைவில் அறிவிக்க வேண்டும். நமது அனைத்து மொழிகளையும் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆக்க வேண்டிய நேரம் இது. இந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் நாள் எனக் கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT