Published : 14 Sep 2022 03:14 PM
Last Updated : 14 Sep 2022 03:14 PM
புதுச்சேரி: அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலரின் வீட்டு மின் கட்டணமாக ரூ.12.26 லட்சம் வந்ததால் அதிர்ச்சியடைந்தவர், மின் துறையை நாடியபோது. மின் கணக்கெடுப்பில் ஒரு ஜீரோவை தவறுதலாக சேர்த்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டதை உணர்ந்து, சரிசெய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சரவணன் (57). மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பார்த்துக் கொள்ள வீட்டிலேயே டிவி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இரவில் லாஸ்பேட்டையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணி செய்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக தனியார்மயத்தை கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இரண்டு மாதங்களாக மீட்டர் ரீடிங் எடுக்கப்படவில்லை.
புதுச்சேரி முழுவதும் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து பில் வர, மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். சரவணன் வீட்டுக்கு வழக்கமாக மாதந்தோறும் ரூ.800-க்குள் மின் கட்டணம் வரும். இந்த மாதம் மின் கட்டணமாக ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 944 வந்தது. வழக்கமாக ஆயிரத்துக்குள் வரும் மின் கட்டணம் பல லட்சங்களில் வந்ததை கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்து முத்தியால்பேட்டை மின் அலுவலகத்துக்கு சென்று கேட்டார்.
அதிகாரிகள், “மின்சார ரீடிங் 21 ஆயிரத்து 115 என்பதற்கு பதிலாக தவறுதலாக கடைசியில் ஒரு பூஜ்ஜியம் சேர்த்துவிட்டனர். இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 150 என வந்துவிட்டது. இந்த மின் ரீடிங் கட்டணத்தை கணக்கிட்டு ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 944 என குறிப்பிட்டுவிட்டனர். அதை சரி செய்து கொடுக்கிறோம்” என குறிப்பிட்டனர்.
ஆனால், மூன்று நாட்களாக ஆகியும் அப்பணி நடக்கவில்லை என்று சரவணன் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து முத்தியால்பேட்டை மின்துறை அலுவலக உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர் அலுவலகத்துக்கு வந்தவுடன் சரி செய்யப்படும் என்று உறுதி தரப்பட்டது. அதையடுத்து மீண்டும் முத்தியால்பேட்டை மின்துறை அலுவலகத்துக்கு சென்று தகவல்களை தந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT