Published : 14 Sep 2022 01:37 PM
Last Updated : 14 Sep 2022 01:37 PM

“நில வழிகாட்டி மதிப்புகளை 200% உயர்த்த திட்டம்... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” - தமாகா

எம்.யுவராஜா | கோப்புப்படம்

சென்னை: "அரசு நில வழிகாட்டி மதிப்புகளை 200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் வீடு கட்ட நினைப்பதும், விவசாய நிலம் வாங்க நினைப்பதும் கனவாகிவிடும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்தில், 2012-ல் அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு ஒட்டு மொத்தமாக சீரமைக்கப்பட்டது. இதில் காணப்பட்ட குறைபாடுகளை சரி செய்து, 2017-ல் அதிமுக அரசு மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உயர்த்த நோக்கத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை 33 சதவீதம் குறைத்தது.

இது நடந்து 5 ஆண்டுகளான நிலையில், வழிகாட்டி மதிப்புகளை ஒட்டுமொத்தமாக சீரமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை, பதிவுத்துறை தொடங்கியுள்ளது. பதிவுத் துறையில் முறையாக, மாநில, மாவட்ட அளவில் கமிட்டி அமைத்து, வருவாய் துறை ஆலோசனையுடன் வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவது வழக்கம். ஆனால் தற்போது வழிகாட்டி மதிப்பு, 200 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.

உதாரணமாக, ஒரு கிராமத்தில் 1 ஏக்கர், 4 லட்சம் ரூபாய் என வழிகாட்டி மதிப்பில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நில உரிமையாளர், வங்கிக் கடன் பெறும் நோக்கத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு 1 ஏக்கர் கைமாறுவதாக பத்திரம் பதிவு செய்து இருப்பார். இதை அடிப்படையாக வைத்து, புதிய வகைப்பாட்டை உருவாக்கி, அந்த பகுதியில் அனைத்து சொத்துக்களுக்கும், ஏக்கர், 10 லட்சம் ரூபாயாக வழிகாட்டி மதிப்பு மாற்றப்படுகிறது.

கடந்த 15 மாத கால ஆட்சியில் திமுக அரசு, கரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மின் சுமையை சுமத்தி உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் எந்த தடங்கலும் இல்லாமல் அரசு அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். சொத்து வரி, மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து மக்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. ஏற்கெனவே பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் அரசு நில வழிகாட்டி மதிப்புகளை, 200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வீடு கட்ட நினைப்பதும், விவசாய நிலம் வாங்க நினைப்பதும் கனவாகிவிடும்.

இதே நமது நாட்டில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாயி தனது அருகில் உள்ள நிலத்தை வாங்க வேண்டுமானால் அவர் பத்திரப்பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் நில வழிகாட்டுதல் மதிப்பை அவர் கட்ட தேவையில்லை. அதுபோன்று மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த அரசு ஏதாவது நல்லது செய்யாமல் மேலும் மேலும் மக்களை வாட்டி வதைக்கும் மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு நேர் எதிராக திமுக அரசு செயல்படுகிறது. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று; இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

போலி விளம்பரங்களை மட்டுமே அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது. இனியாவது வாக்களித்த மக்களுக்கு வஞ்சனைகள் செய்யாமல் இருக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x