Published : 14 Sep 2022 10:38 AM
Last Updated : 14 Sep 2022 10:38 AM

38-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திண்டுக்கல் மாவட்டம் - வளர்ச்சி எப்படி?

மதுரை மாவட்டத்தில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் பிரிந்து 37 ஆண்டுகள் நிறைவடைந்து 38-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

செப்.15-ல் பிறந்தநாள் காணும் திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை அரசு முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்துபிரிந்து, 1985-ம் ஆண்டு செப்டம்பர் 15- ல் திண்டுக்கல் மாவட்டம்உருவாக்கப்பட்டது.

விவசாயம், சுற்றுலா, ஆன்மிகம், தொழில் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய மாவட்டம் 37 ஆண்டுகளில் போதுமான வளர்ச்சியை அடையாமல் பின்தங்கியே உள்ளது.

ஆன்மிகத் தலமானபழநி, சுற்றுலாத் தலமான கொடைக்கானல், தொழில் நகரமான திண்டுக்கல், காய்கறிகள் நகரான ஒட்டன்சத்திரம், பூக்கள் அதிகம் விளையும் நிலக்கோட்டை, நூற்பாலைகள் அதிகம் உள்ள வேடசந்தூர் என பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஆனால் இந்த நகரங்கள் அந்தந்த துறைகளில் வளர்ச்சி காண முடியாமல் தேக்க நிலையில் உள்ளன.

தொழில் வளர்ச்சி இல்லை: இங்கு சிறந்து விளங்கிய திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு பெற்றும் சந்தைப்படுத்தலில் சாதிக்க முடியவில்லை. தோல் தொழிற்சாலைகளில் அதிக மாசு காரணமாக தொடர்ந்து நடத்த முடியாமல் பலர் விட்டுவிட்டனர்.

இரும்புப்பெட்டி தொழில் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

பாரம்பரிய தொழில்களே நசிந்துவிட்ட நிலையில், மாவட்டத்துக்கு புதிய தொழில்களை கொண்டுவர அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் புதிய தொழிற்சாலை ஒன்று கூட இம்மாவட்டத்துக்கு வரவில்லை. இதனால் இம்மாவட்ட மக்கள் வேலை தேடி பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. மலர் சாகுபடி அதிகம் உள்ள நிலக்கோட்டையில் அரசு சார்பில் நறுமண வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்தால் குப்பையில் கொட்டும் நிலை உள்ளது. இதனால் தக்காளி ஜூஸ், சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் உள்ளது.

சுற்றுலா வளர்ச்சி இல்லைதிண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம்.

கொடைக்கானல், சிறுமலையில் சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்த போதிலும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் சுற்றுலா வளர்ச்சி மாவட்டத்தில் முற்றிலும் இல்லை.

கொடைக்கானலின் பெரும் பிரச்சினையே வாகன நிறுத்துமிடம்தான். அங்கு பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்பது பேச்சளவிலேயே உள்ளது.

பேருந்து நிலைய இடமாற்றம்: திண்டுக்கல் மாநகராட்சியின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. நகரைச் சுற்றியுள்ள 10 கிராம ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சி எல்லை விரிவாக்கம் என்பதும் கானல் நீராக உள்ளது.

நகரில் நெரிசலுக்கு தீர்வுகாண நகருக்கு வெளியே பேருந்துநிலையத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டம் கிடப்பில் உள்ளது.

இம்மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x