Published : 14 Sep 2022 04:16 AM
Last Updated : 14 Sep 2022 04:16 AM
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட இபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் தொடர்ந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு எதிராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான கே.பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீ்ர்செல்வத்தின் ஒப்புதல் பெறாமல் கூட்டினார்.
அதற்கு முன்பாக கட்சி அலுவலகத்தில், அதிமுகவின் புகழை சீர்குலைக்கும் விதமாக அடியாட்களை உள்ளே தங்கவைத்து அவர்களுக்காக இளம்பெண்களை வைத்து குத்தாட்டம் போட வைத்துள்ளனர். அதை அப்போதே சிலர் தட்டிக் கேட்டுள்ளனர். அதுதொடர்பாக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பான ஆதாரங்களுடன் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திடம் வந்து சிலர் முறையிட்டனர். இதன் காரணமாகவும், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளிவரவிருந்த காரணத்தாலும் அன்று காலை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், நாங்களும் கட்சி தலைமை அலுவலகத்துக்குச் சென்றோம்.
ஆயுதங்களால் தாக்குதல்: அப்போது பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரது தூண்டுதலின்பேரில் அவர்களது ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் வி.என்.ரவி, வேளச்சேரி எம்.கே.அசோக், ஆதிராஜாராம் ஆகியோர் எங்களை கட்சி அலுவலகத்துக்குள் செல்லவிடாமல் கதவைப்பூட்டி தடுத்து பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர்.
அலுவலகத்துக்குள் இருந்த பொருட்களை களவாடிச் சென்றதும் அவர்கள்தான். அவற்றில் சிலவற்றைப் பிடுங்கி, எங்களது தரப்பினர் ஒருங்கிணைப்பாளரின் வாகனத்தில் பாதுகாப்பாக வைத்தனர். உண்மையில் இதுதான் நடந்தது. ஆனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முந்திக்கொண்டு எங்கள் மீது புகார் அளித்துள்ளார். அதிமுக அலுவலகத்தின் உள்ளே நடந்த சம்பவங்கள் குறித்து பென்-டிரைவ் ஆதாரங்களுடன் நாங்களும் போலீஸில் புகார் கொடுத்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை அலுவலக மேலாளர் மகாலிங்கம், துணை மேலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கூட்டு சேர்ந்து களவாடியுள்ளனர். எனவே அதிமுக அலுவலகத்தில் குண்டர்களை ஏவிவிட்டு கலவரத்தைத் தூண்டிய கே.பழனிசாமி, சி.வி.சண்முகம் மற்றும் கலவரத்தை ஏற்படுத்திய 4 மாவட்டச் செயலாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
செப்.19-க்கு தள்ளிவைப்பு: இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத் மற்றும் வழக்கறிஞர் எம்.ராஜலட்சுமி ஆகியோர்ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி, ராயப்பேட்டை காவல் ஆய்வாளர், சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்.19-க்கு தள்ளி வைத்துள்ளார்.
சிசிடிவி பதிவுகள், ஆதாரங்கள் சேகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தகவல்
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், எனவே விசாரணையை துரிதப்படுத்த சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது சிபிசிஐடி போலீஸ் தரப்பில், இதுதொடர்பாக கடந்த ஆக.7 அன்று அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விசாரணை நிலை குறித்த அறிக்கை செப்.19 அன்று தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை செப்.19-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT