Published : 14 Sep 2022 06:37 AM
Last Updated : 14 Sep 2022 06:37 AM
சென்னை: சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வுகாணவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகளில் காவல் துறையால் செயல்படுத்தப்படும் ‘சிற்பி’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 14) காலை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தில் தேசிய மாணவர் படை சீருடை போல் மாணவர்களுக்கு தனி சீருடையும் வழங்கப்படுகிறது.
சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகரகாவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை தொடங்க கடந்தாண்டு சென்னைகாவல் துறை முடிவெடுத்தது.
இதன்படி, சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில், ‘சிற்பி’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய காவல் துறைநடவடிக்கை எடுத்தது. குறிப்பாக,சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களைக் கொண்டு இந்த சிற்பி திட்டத்தை சென்னை மாநகர காவல் துறை செயல்படுத்துகிறது.
இத்திட்டப்படி, 8-ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு தனி சீருடைவழங்கப்பட உள்ளது. பள்ளிகளில் தேசிய மாணவர் படை (என்சிசி) போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
அத்துடன், மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக அவர்களை மாற்றும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
இதுதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண்,காவல் கரங்கள் உள்ளிட்ட அவசரகால எண்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவூட்டுவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் பள்ளிமாணவர்களின் தகவல்களைபெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிற்பி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 14) காலை 10 மணிக்குகலைவாணர் அரங்கில் நடைபெறும்நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT