Published : 14 Sep 2022 04:35 AM
Last Updated : 14 Sep 2022 04:35 AM
வசிஷ்ட நதியின் நீராதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் கைக்கான் வளவுத் திட்டப் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும், என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் முக்கிய நதிகளில் ஒன்றாக வசிஷ்ட நதி உள்ளது.
பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள கல்வராயன் மலைப்பகுதியில் வசிஷ்ட நதி உருவாகி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வட்டாரங்களில் உள்ள பல கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களின் பாசன ஆதாரமாகவும் உள்ளது.
பருவமழைக் காலங்களில் வசிஷ்ட நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அதைச் சார்ந்துள்ள ஏரிகளை நிரப்பி கிராமங்களை செழிக்க வைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு அரிதாகியது.
வசிஷ்ட நதியின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருக்கும், கல்வராயன் மலையில் கருமந்துறை அருகே கைக்கான் வளவு என்ற ஓடையில் ஏற்பட்ட தடை காரணமாக வசிஷ்ட நதிக்கான நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டதாக, ஆயக்கட்டு விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே, கைக்கான் வளவு ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்கி, வசிஷ்ட நதியின் நீராதாரத்தை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த அதிமுக ஆட்சியின்போது, கைக்கான் வளவு திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், இப்பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும், என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது: கைக்கான் வளவு திட்டப்பணிகள் ரூ.7.30 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.
இத்திட்டத்தில் கைக்கான் வளவு ஓடையில் இருந்து, வசிஷ்ட நதியின் கரியகோவில் அணை வரை சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஆண்டுக்கு 110 நாட்கள் மட்டும் 50 கனஅடி வீதம் கைக்கான் வளவு ஓடையில் இருந்து நீரைப் பெற முடியும்.
இதனால், கரியகோவில் அணைக்கு ஆண்டுதோறும் சீரானநீர் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைக்கான் வளவு திட்டம் செயல்படுத்தப்படும் இடம், இயற்கை எழில் மிகுந்த இடமாக இருப்பதால், சுற்றுலா வருபவர்கள் கண்டு ரசிக்கும் வகையில், அந்த இடத்தை அழகூட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒட்டுமொத்தப் பணிகளும் ஓரிரு மாதங்களில் நிறைவடைந்து, கரியகோவில் அணைக்கு நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT