Published : 13 Nov 2016 02:15 PM
Last Updated : 13 Nov 2016 02:15 PM
மதுரை மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் பழைய 72 வார்டுகளுக்கு வைகை கூட்டுக் குடிநீர் திட்டம்-1, திட்டம்-2 மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளான திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர், அவனி யாபுரம், விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 வார்டுகளில் ஆழ்துளைக் கிணறுகள், காவிரி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், மாநகராட்சிக்கு தினமும் 300 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது ஒட்டுமொத்த குடிநீர் திட்டங்கள், ஆழ்துளை கிணறுகளில் இருந்து 70 முதல் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது.
நிரந்தர நீராதார கட்டமைப் புகளை ஏற்படுத்த மதுரை மாநகராட்சி தொலைநோக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆரம்பத்தில் மாநகராட்சியில் ஒருநாள்விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அது 3 நாள், 5 நாள், 7 நாள் என குடிநீர் விநியோகம் செய்யும் முறை வார்டுகளுக்கு வார்டு வேறுபடுகிறது. அதுவும் குறைந்த நேரமே விநியோகிப்பதால் குழாய்களில் தண்ணீர் வருவதே இல்லை.
தற்போது வடகிழக்குப் பருவ மழையும் ஏமாற்றி வருவதால், மாநகராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, வைகை அணையில் 22 அடிக்கும் குறைவான தண்ணீரே உள்ளது. இந்த நீரைக் கொண்டு மாநகராட்சியின் குடிநீர் தேவையை அதிகாரிகளால் பூர்த்தி செய்ய முடியவில்லை. வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் லாரி தண்ணீ ரைதான் மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அதனால், லாரி தண்ணீர் விலையும் அதிகரி த்துள்ளது. அந்த தண்ணீரும் கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருவதால் மக்கள் விரக்தி அடைந் துள்ளனர். மதுரையில் மார்ச் மாதத்தில்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு தற்போதே குடிநீர் தட்டுப் பாடு தொடங்கி விட்டதால், மக்கள் தவிக்கின்றனர்.
கைவிரிக்கும் மாநகராட்சி
முன்பு மேயர், கவுன்சிலர்களிடம் முறையிட்டு லாரி தண்ணீரையாவது வரவழைத்து விடலாம். தற்போது அதிகாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மாநகராட்சியின் மொத்த கையிருப்பில் மூன்றில் ஒரு பங்கு குடிநீர்தான் கிடைக்கிறது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் இருக்கும் இடங்களை தேர்வு செய்து 500 புதிய ஆழ்துளை கிணறுகளை அமைக்க உள்ளோம். ஏற்கெனவே 2013-ல் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளை பராமரிக்கும் பணி நடைபெறுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT