Published : 13 Sep 2022 06:07 PM
Last Updated : 13 Sep 2022 06:07 PM
சென்னை: லஞ்ச வழக்கில் சிக்கி, விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக 13 ஆண்டுகளுக்கு பின் புதிதாக துறை ரீதியான விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இருவருக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உதவிப் பொறியாளர்களாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகிய இருவரும் 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, இடைநீக்க காலத்தை வரன்முறைப்படுத்தி, தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், லஞ்ச வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இரு ஆண்டுகளுக்கு பின், சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையை ரத்து செய்து விட்டு, 2021-ல் இரண்டாவது முறையாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற வழக்கு விசாரணையும், ஒழுங்கு நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்ற நிலையில், துறைரீதியான விசாரணையை 13 ஆண்டுகள் தாமதத்துக்கு பின் மேற்கொள்வதற்கான உரிய காரணங்களை அரசுத் தரப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறி, இருவர் மீதான துறைரீதியான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இருவருக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். துறை ரீதியான விசாரணைக்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க பிறப்பித்த உத்தரவை ஏற்று, உரிய கால நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பித்த தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...