Published : 13 Sep 2022 05:51 PM
Last Updated : 13 Sep 2022 05:51 PM
சென்னை: சட்டப்பேரவையில் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளுக்கான ஆணைகளும் அக்டோபர் 15-க்குள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ஆட்சி அமைந்த பிறகு நடக்கக் கூடிய நான்காவது அனைத்துத் துறையினுடைய செயலாளர்கள் கூட்டம் இந்தக் கூட்டம். உங்கள் அனைவரையும் தனித்தனியாகத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும், அனைவரையும் ஒருசேரச் சந்திப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைக் கவனித்து வந்தாலும், யாரும் தனியாகச் செயல்பட இயலாது.
ஒன்றோடு ஒன்று இணைந்தவைதான் அரசுத் துறைகள். எனவே, பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அடிப்படை வழிமுறையாக அமைந்திருக்கிறது. அதேபோல், ஒவ்வொரு துறைச் செயலாளரும் தங்கள் துறையை மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் எத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை அனைவரும் அறிவதற்கு வாய்ப்பாக இம்மாதிரியான கூட்டுக் கூட்டங்கள் அவசியமானவையாக இருக்கின்றன என்பதையும் நாம் புரிந்தாக வேண்டும்.
அனைத்துத் துறையும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள். அத்தகைய சிந்தனையுடன் தான் திட்டங்களைத் நாம் தீட்டி வருகிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொல்லியிருக்கிறோம்.
இப்படி பல்வேறு வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்திருந்தாலும், அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், அமைச்சர்களுக்கும், துறையைச் சார்ந்திருக்கக் கூடிய செயலாளர்களுக்கும் தான் இருக்கிறது.
இதில் ஒவ்வொரு துறையின் சார்பிலும், பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறீர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். துறை ரீதியான தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் நான் இதனை பெருமையாகச் சொல்லி பாராட்டியும் இருக்கிறேன். ஒவ்வொரு துறை சார்பிலும் நிறைவேற்றப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களை நான் இங்கு பட்டியலிடுவதாக இருந்தால், அதுவே பல மணிநேரம் ஆகும்.
2021-22-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1680 அறிவிப்புகளில் 100 அறிவிப்புகள் நீங்கலாக, 1580 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, ஏறக்குறைய 94 விழுக்காடு அறிவிப்புகள் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
2022-23-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1634 அறிவிப்புகளில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆய்வின்போது, 23 விழுக்காடு அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, 12.09.2022 அன்றைய நிலவரப்படி பார்த்தீர்கள் என்றால், ஏறக்குறைய 57 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அதாவது 937 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்குரிய ஆணைகளுக்கு அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் வெளியிடக்கூடிய வகையில் செயல்படுமாறு நம்முடைய அனைத்துத் துறையினுடைய செயலாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...