Published : 13 Sep 2022 02:42 PM
Last Updated : 13 Sep 2022 02:42 PM
சென்னை: அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே.சி.டி. பிராபகர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்தார். ஆனால், அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடியிருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோர் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.
மேலும் கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் எங்களைத் தாக்கினர். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்திற்குள் இருந்த முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்தனர். நடந்த உண்மை இவ்வாறு இருக்க, எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக நாங்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு உள்துறை செயலாளர், காவல் துறை டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT