Published : 30 Jun 2014 09:40 AM
Last Updated : 30 Jun 2014 09:40 AM

மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழ தொழில்நுட்ப காரணங்கள் என்ன?: லிஃப்டுக்காக விடப்பட்டிருந்த இடத்தில் காற்று புகுந்தது காரணமா?

அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு தரக்குறைவான கட்டுமானப் பொருட்கள், முறை யான திட்டமிடாமை போன்றவை காரணமாக இருக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இலாகாவின் கீழ் உள்ள மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:

மின்னல் தாக்கியதால் இவ் வளவு பெரிய கட்டிடம் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு இல்லை. ஒரு சிறிய பகுதிதான் இடிந்து விழும். இந்த விபத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆய் வறிக்கை வந்த பிறகே விபத்துக் கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும்.இந்த கட்டிடம் அமைந் திருக்கும் இடத்தில் மண்ணின் தன்மையை ஆராயும் ஜியோ-டெக்னாலஜி ஆய்வு நடைபெற்றதா எனத் தெரியவில்லை.

மேலும், அதிக உயரமான கட்டி டத்தை கட்டும்போது அதற்கேற்ப தடிமனில் கட்டுமானக் கம்பியை பயன்படுத்த வேண்டும். கம்பி கட்டுவதில் தேர்ந்த தொழிலாளர் களையே ஈடுபடுத்த வேண்டும் என்றார்.

சந்தையில் கிடைக்கின்ற கட்டு மானப் பொருட்களின் தரம் சரியாக இருந்தாலே இதுபோன்ற அசம்பாவிதங்களை ஓரளவுக்கு தடுக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன் ‘போர்ட்லேண்ட்’ சிமென்ட்டால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இப்போதும் வலுவாக உள்ளன. ஆனால், தற்போது சிமென்ட் நிறுவனங்கள் பல வகையான ‘கிரேடு’களில் சிமென்ட் தயாரித்து விற்பனை செய்கின்றன . மேலும் மணல், கம்பிகள், செங்கற்கள் போன்றவை சிறந்த தரத்துடன் கிடைப்பதில்லை. உப்பு தன்மை கொண்ட மணல், வேகாத செங்கற்கள், பழைய இரும்பு குப்பைகளால் தயாராகும் கம்பிகள், தரம் குறைந்த ரெடிமிக்ஸ் கலவை என்று தரமற்ற பொருட்கள் அதிகரித்திருப்பதும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கிரெடாய் அமைப்பின் மூத்த நிர்வாகி செந்தில்குமார் கூறியதாவது:

நிலத்தின் உறுதித் தன்மை சரியில்லை, தரமான பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்றால் கட்டிடம் ஒரு பக்கமாக மட்டுமே சாய்ந்திருக்கும். ஆனால், இது இரண்டாக பிளந்து விழுந்திருக்கிறது.

இந்த கட்டிடத்தின் நடுப்பகுதியில் லிப்டுக்காக காலியிடம் விடப்பட்டுள்ளது. அந்த காலியிடத்தின் வழியாக காற்று நுழைந்துள்ளது. ஆனால், ஒரு பக்கத்தில் சுவர் அடைபட்டிருந்ததால், காற்று வெளியேற முடியவில்லை. எனவே, பலத்த காற்று காரணமாக இந்த கட்டிடம் இடிந்து விழுந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

கட்டிட அனுமதி அளிப்பதில் அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கட்டிடம் கட்டப்படும்போது அதன் தரத்தை உறுதிப்படுத்த ஓர் அமைப்பு வேண்டும் என்ற கோரிக்கையையும் அழுத்தமாய் வலியுறுத்த இந்த கட்டிட விபத்து சம்பவம் தூண்டியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

விதிமீறல் இல்லை: சிஎம்டிஏ

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட சிஎம்டிஏ அதிகாரிகள், முதல்கட்ட அறிக்கையை தயாரித்து, வீட்டு வசதித்துறை செயலாளரிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை சமர்ப்பித்தனர். அது தலைமைச் செயலாளர் மூலம் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததில் விதிமீறல் எதுவும் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘மவுலிவாக்கம் விபத்து பற்றிய முதல்கட்ட ஆய்வறிக்கையில் திட்ட அனுமதி தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் நடந்த இடம், குடியிருப்புப் பகுதியாக (ரெசிடென்ஷியல் சோன்) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட ஒப்புதல் கொடுத்ததில் தவறு எதுவும் இல்லை. எனினும், இதுபற்றிய விரிவான அறிக்கை தயாரிப்பது பற்றி தமிழக அரசு விரைவில் அறிவிக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x