Published : 13 Sep 2022 03:44 AM
Last Updated : 13 Sep 2022 03:44 AM
சென்னை: மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய மின் இணைப்பு மற்றும் சேவை கட்டணங்கள் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய இணைப்புக் கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம், வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. மின்கம்பங்கள் மூலமாகவும், தரைக்கு அடியில் கேபிள் மூலமாகவும் மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு ஏற்ப இந்த கட்டணங்கள் இருமடங்காக நிர்ணயம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, மின்கம்பங்கள் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளில் மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750, இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000, பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200, வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2,800, வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒருமுனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200, வளர்ச்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம், இணைப்புக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000, மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750, வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒருமுனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக ரூ.5,200-ம், மும்முனை மின்இணைப்புக்கு ரூ.7,100-ம் கூடுதலாக வசூலிக்கப்படும். வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆகவும், பழுதடைந்த மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின்இணைப்புக்கு ரூ.500-ல்இருந்து ஆயிரம் ரூபாயாகவும், மும்முனை மின்இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருமுனை மின்இணைப்பு மீட்டரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT