Published : 13 Sep 2022 03:50 AM
Last Updated : 13 Sep 2022 03:50 AM

அதிமுக அலுவலக சாவி விவகாரம் | ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி: அதிமுக தலைமை அலுவலக சாவியை பழனிசாமி வசம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஒற்றைத் தலைமை தொடர்பாக முடிவெடுக்க, கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இரு தரப்பிலும் தலா 200 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாவியை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீ்ர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி, அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் வருவாய் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அரசியல் கட்சியின் அலுவலகத்தை எதன் அடிப்படையில் சீல் வைத்தீர்கள்? சீலிடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அலுவலகத்துக்கு சீல் வைத்தால் கட்சி எங்கிருந்து செயல்படும்” என்று கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், “பள்ளிகள், குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு பிறகே, சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “அரசியல் கட்சிகள் ஜனநாயக வழியில்தான் செயல்பட வேண்டும். அதைத் தாண்டி செயல்படுவதை ஏற்க முடியாது. மனுதாரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் அவரால் எப்படி அலுவலகத்துக்கு உரிமை கோர முடியும்” என்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வருவதாகவும், அதனாலேயே இங்கு மேல்முறையீடு செய்து உரிமை கோருவதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “அதிமுக அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம். அதேபோல, அதிமுக அலுவலகத்துக்கு குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின்கீழ் சீல் வைக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என்ற உத்தரவையும் உறுதி செய்கிறோம்” எனக் கூறி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடிக் கொள்ள, இந்த உத்தரவு தடையாக இருக்காது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x