Published : 13 Sep 2022 04:35 AM
Last Updated : 13 Sep 2022 04:35 AM

அரசின் திட்டங்கள் முறையான நபர்களை சென்றடைவதில்லை: உயர் நீதிமன்றம் வேதனை

மதுரை

அரசின் திட்டங்கள் தகுதியான நபர்களுக்குச் சென்றடைவதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த வெற்றிவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருமங்கலம் எஸ்.பி.நத்தம் பகுதி எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக இலவச பட்டா வழங்குவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் எஸ்.பி.நத்தத்தைச் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு மட்டுமே பட்டா வழங்க வேண்டும் அதன்படி அங்குள்ள 1.09 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை கேட்டு எஸ்.பி. நத்தத்தை சேர்ந்த 65 பேர் விண்ணப்பம் அளித்தோம்.

ஆனால் எஸ்.பெருமாள்பட்டி, கிருஷ்ணாபுரம் கிராமங்களைச் சேர்ந்த பலருக்கும், ஒரே குடும்பத்தில் பலருக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

எனவே, அரசாணையில் கூறப்பட்டிருப்பதுபோல் எஸ்பி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் இலவச பட்டா வழங்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறுமனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கை தொடர்பாக சாந்திவீரன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், "தகுதியற்றவர்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் முறையான நபர்களை சென்றடைவதில்லை.

இதனால் திட்டங்களின் நோக்கம் வீணாகி வருகிறது. இந்த வழக்கில் தகுதியற்றவர்களுக்கு இலவச பட்டா வழங்கிய அதிகாரிகள் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x