Published : 12 Sep 2022 09:26 PM
Last Updated : 12 Sep 2022 09:26 PM
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், "கொளத்தூர் தொகுதி என்றால் எனக்கு ஒரு மகிழ்ச்சி வந்துவிடும். மூன்று முறை என்னை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களில் ஒருவனாக நினைத்து, என்னைத் தொடர்ந்து வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களைச் சந்திக்க வரும்போது எனக்கு மகிழ்ச்சி தானாக வந்துவிடும், ஒரு எழுச்சியும் வந்துவிடும்.
197ல் குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு அமைப்பை இந்தியாவிலேயே முதன் முதலில் ஏற்படுத்தியது தலைவர் கருணாநிதி. இன்றைக்கு அதே திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற பெயரை தாங்கி, இந்த கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் 840 குடும்பங்கள், அந்த குடும்பங்களின் வாழ்வில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு. அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு நாங்கள் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை. அதுவும், கொளத்தூர் தொகுதியில் மிக முக்கியமான பகுதி, இந்த கெளதமபுரம். 400 வீடுகள் இருந்த கௌதமபுரத்தில், பழைய வீடுகளெல்லாம் அகற்றப்பட்டு, தற்போது 840 புதிய வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, அனைவர்க்கும் கல்வி, வேலை, வாழ்க்கைக்குத் தன்மானம், நாட்டுக்கு இனமானம் ஆகியவற்றை ஊட்டுவதற்கான உருவாக்கியிருக்கக்கூடிய ஆட்சியாகத்தான் இன்றைக்கு திமுக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
குடிசை மாற்று வாரியம் என்பதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயரைச் சூட்டினோம். குடிசையை மாற்றிக் கட்டடம் கட்டுவது மட்டும் நோக்கம் அல்ல. இந்த நகர்ப்புற மக்களது வாழ்க்கையும் மேம்பட வேண்டும், வாழ்விடமும் மேம்பட வேண்டும், வாழ்க்கைத் தரமும் மேம்பட வேண்டும் என்று நினைக்கும் அரசுதான் திமுக அரசு. அதனால்தான், இதை திராவிட மாடல் அரசு என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
சில மாநிலங்களில் ஏதாவது ஒரு பெரிய விழா நடந்தது என்றால், வெளிநாட்டிலிருந்து ஒரு தலைவரை அழைத்துக் கொண்டுவந்து, நம்முடைய இந்தியாவில் இருக்கக்கூடிய சில மாநிலங்களில் சுற்றிப் பார்க்கின்ற நேரத்தில், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடியவர்கள் சில வேலைகளை செய்திருக்கிறார்கள், என்ன வேலை என்றால், அந்த குடிசைப் பகுதி அவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக தார்ப்பாய்களைப் போட்டு மறைத்திருக்கிறார்கள். அதுவும் நடந்தது, நம்முடைய நாட்டில். ஆனால் நம்முடைய மாடல் என்பது, மறைக்கும் மாடல் அல்ல, திராவிட மாடல். அதனுடைய அடையாளம்தான் இந்த கெளதமபுரத்தில் இருக்கக்கூடிய இந்தக் குடியிருப்பு. உண்மையான, நேர்மையான இந்தத் திட்டங்களின் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை இன்றைக்கு நாம் உயர்த்திக் கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...