Published : 12 Sep 2022 05:38 PM
Last Updated : 12 Sep 2022 05:38 PM
மதுரை: “தமிழக மின்சார வாரியத்தில் ஊழலை சரி செய்தாலே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''பரமக்குடிக்கு இமானுவேல் சேகரனுக்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லும் வழியில் பல இடங்களில் போலீஸார் தடுத்தனர். இதனால் பரமக்குடிக்கு செல்ல 4 மணி நேரத்திற்கு மேலானாது. என்னை பரமக்குடிக்கு செல்ல விடாமல் தடுக்கும் நோக்கத்தில் வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டன. எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மற்றொரு அமைப்பினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஒரே சமூகத்திற்கு இடையே மோதலை உருவாக்க போலீஸார் முயன்றனர்.
இமானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும். நினைவிடத்தை பராமரிக்கும் பொறுப்பை புதிய தமிழகம் கட்சியிடம் வழங்க வேண்டும். புதிய தமிழகத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் மாவட்ட நி்வாகமும், போலீஸாரும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் போலீசாரை பயன்படுத்தி அரசியல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. மின் கட்டண உயர்வை ஏற்க முடியாது. இந்த கட்டண உயர்வால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது. மின் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் செப்டம்பர் 20-ல் ஆர்ப்பாட்டம் நடத்தும்.
நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைய திமுகவே காரணம். திமுகவின் தவறான பிரசாரத்தால் மாணவர்களால் நீட் தேர்வை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் எனத் திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். மக்களின் குரலை முதல்வர் கேட்பதில்லை'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT