Published : 12 Sep 2022 04:43 PM
Last Updated : 12 Sep 2022 04:43 PM
கரூர்: நாகர்கோவில் - கோவை விரைவு ரயிலிலிருந்து கரூர் அருகே நள்ளிரவில் தவறி விழுந்த கோவை இளைஞரை கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் 5 கி.மீட்டர் தூரம் தேடிச் சென்று மீட்டனர். மேலும், 108 ஆம்புன்ஸிற்கு 500 மீட்டர் தூரம் ஸ்ட்ரெக்சரில் வைத்து தூக்கிக் சென்றனர்.
நாகர்கோவிலிருந்து கரூர் வழியாக கோவை செல்லும் விரைவு ரயிலில் இன்று (செப்.12) அதிகளவு கூட்டம் இருந்துள்ளது. பலரும் படியருகே நின்றுக்கொண்டு பயணம் செய்துள்ளனர். இதில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் கோவையைச் சேர்ந்த சிக்கந்தர்பாட்ஷா (30) என்ற இளைஞர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு கோவை திரும்பிக் கொண்டிருந்தார்.
இவர் கரூருக்கு சுமார் 10 கி.மீட்டர் முன்பு ரயிலில் இருந்து அதிகாலை 4 மணி சுமாருக்கு தவறி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து ரயில் பயணம் செய்த சகபயணி ஒருவர் 101 மூலம் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கரூர் நிலைய அலுவலர் சி.திருமுருகன் தலைமையிலான 8 பேர் கொண்ட தீயணைப்பு மீட்புப்பணிக் குழுவினர் விடியற்காலை சுமார் 5.45 மணிப்போல மணவாடியில் இருந்து ரயில் இருப்புப்பாதை வழியே இளைஞரை தேடிக் கொண்டு சுமார் 5 கி.மீட்டர் பயணம் செய்து செல்லாண்டிபட்டி என்ற இடத்தில் சிக்கந்தர் பாட்ஷாவை கண்டு பிடித்து மீட்டனர்.
இடது கால் மற்றும் உடம்பில் காயங்களுடன் இருந்த சிக்கந்தர்பாட்ஷாவை 108 ஆம்புலனஸிற்கு கொண்டு செல்வதற்காக ஸ்டெக்சர் மூலம் சுமார் அரை கி.மீட்டர் தூரம் தூக்கி கொண்டு சென்றனர். 108 ஆம்புலன்ஸில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரூர் ரயில்வே போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT