Published : 12 Sep 2022 01:53 PM
Last Updated : 12 Sep 2022 01:53 PM

'முதல்வர் நீதிமான் என்றால் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்' - கே.பி.ராமலிங்கம் 

தருமபுரியில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்திப்பு.

தருமபுரி: "முதல்வர் நீதிமான் என்றால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்" என்று பாஜகவின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், வழக்கு தொடர்பாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நீதிமன்றத்தில் கையெழுத்திட இன்று (12-ம் தேதி) வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்துக்கு மாலை அணிவிக்க சென்றபோது, தடை செய்கிற வகையில் பூட்டி வைத்திருந்தனர். அந்த பூட்டை அப்புறப்படுத்தி மாலை அணிவித்து மரியாதை செய்து சென்றோம். சேதமடைந்த பூட்டுக்கு மாற்றாக புது பூட்டும் வாங்கிக் கொடுத்து விட்டோம். அதற்காக, எங்கள் மீது பெரிய வழக்கை பதிவு செய்து, தினமும் பென்னாகரம் வந்து கையெழுத்திடும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக முதல்வர் நேரடியாக தலையிட்டு இந்த வேலையை செய்திருக்கிறார்.

நாட்டு மக்களுக்காக சட்ட ஒழுங்கை ஒழுங்காக பாதுகாக்க வேண்டும் என்றால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வது தான். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும், அந்த வழக்கில் அவர் லஞ்சம் பெற்றதற்கான முகாந்திரம் இருக்கிறது, வழக்கில் தொடர்புடையவர் வாபஸ் பெற்றார் என்ற காரணத்துக்காக லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை முடித்திருக்கக் கூடாது என்று மிகக் கடுமையாக சாடி, விசாரணை அமைப்பையும் கேள்விக்கு உள்ளாக்கி செந்தில் பாலாஜி மீது உயர் நீதி மன்றத்திலே மீண்டும் வழக்கை தொடரச் செய்வதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

இன்றைய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊர் ஊராகச் சென்று, செந்தில்பாலாஜி மிகப்பெரிய குற்றவாளி, அவரை விடக் கூடாது என்று பேசினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருவிதமாகவும், ஆளுங்கட்சி ஆனபிறகு வேறு விதமாகவும் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். குற்றவாளி என தானே குற்றம்சாட்டிவிட்டு தற்போது தன் அமைச்சரவையில் செந்தில் பாலாஜியை அங்கம் வகிக்கக் செய்துள்ளார். அவர் தான் சரியாக திருடி, தனக்கும் பங்கு கொடுப்பார் என்ற உணர்வோடு செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக தொடர வைத்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ள பின்பும் செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பதை பார்க்கும்போது, பல்வேறு குற்றப் பின்னணிகள் உள்ள செந்தில் பாலாஜிக்கு முதல்வரும் உதவுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. குற்றவாளிகளுக்கு உதவுவதும் குற்றம் தான். இந்த விவகாரம் தொடர்பாக, தன்னைத் தானே குற்றவாளி என தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடரப் போகிறாரா அல்லது ஒரு நீதிமானாக செயல்பட்டு செந்தில்பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்கப் போகிறாரா என்பது தான் இன்றைய கேள்வி.

தமிழக சட்டப்பேரவையின் பாஜக-வுக்கான தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தமிழக ஆளுநரிடம் இது தொடர்பாக மனு கொடுத்துள்ளோம். இன்று(12-ம் தேதி) கரூரில் இது தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக சார்பில் ஆயத்தமாகி வந்த நிலையில் 4 மாவட்ட காவல்துறையைக் கொண்டு மாநில அரசு ஆர்ப்பாட்டத்தை முடக்கப் பார்க்கிறது. பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தில் பூட்டை சேதப்படுத்தியதில் ரூ.650 மதிப்பிலான சொத்து சேதம் என என்மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், நாட்டுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள பெரிய வழக்கு விவகாரத்தில் அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க முதல்வர் ஏன் தயங்குகிறார். நீங்கள் நீதிமானாக இருந்தால் அமைச்சரவையில் இருந்து வெளியேறி குற்றமற்றவர் என நிரூபித்த பிறகு மீண்டும் அமைச்சரவைக்கு வாருங்கள்.

இன்றைய தமிழக அரசாங்கம் சட்டத்துக்கு புறம்பான அரசாங்கமாக செயல்படுகிறது. அதனால்தான் எங்கள் மீதெல்லாம் சட்டத்துக்கு புறம்பான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை எல்லாம் தொடர்ந்து சந்தித்து எங்கள் நியாயத்தை நிலைநாட்டுவோம். பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலயம் என பெயர் மாற்றம் செய்யப்படும் வரை பாஜக சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்டுள்ளவர் தான் இன்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர். அவர், மின் கட்டண உயர்வு தொடர்பாக மாவட்டம்தோறும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல், சென்னையில் மட்டும் பெயரளவுக்கு கூட்டம் நடத்தி விட்டு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் தான் மின் கட்டண உயர்வுக்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே, மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்து தமிழக மக்கள் சுமையின்றி வாழ வழி ஏற்படுத்த வேண்டும். இதை தமிழக அரசாங்கம் செய்யும் என நம்புகிறோம். தொடர்ந்து அதை வலியுறுத்துவோம்'' என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x