Published : 12 Sep 2022 12:21 PM
Last Updated : 12 Sep 2022 12:21 PM
சென்னை: வாரந்தோறும் கொடிய நிகழ்வுகள் நடப்பதால் தமிழக அரசு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ''காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மது போதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.
கொலை செய்த தம்பிக்கு 17 வயது தான். அவரது தாய், தந்தையர் இருவரும் ஆசிரியர்கள். 12-ஆம் வகுப்பு பயிலும் அவர் நன்றாக படிக்கக் கூடியவர் தான். ஆனால், இத்தனை நல்ல விஷயங்களையும் சிதைத்து அந்த சிறுவனை கொலைகாரனாக்கியிருக்கிறது மதுபோதை. அப்படியானால் அது எவ்வளவு கொடியது?
மனிதன் இயல்பான நிலையில் தாயை தாக்க முனைய மாட்டான்; அண்ணனை கொலை செய்ய முயலமாட்டான். ஆனால், பதின்வயதை தாண்டாத சிறுவன் இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியிருப்பதற்கு காரணம் அவனை இயக்கிய மது அரக்கன் தான். அந்த சிறுவன் கஞ்சாவுக்கும் அடிமை எனக் கூறப்படுகிறது.
இது போன்ற கொடிய நிகழ்வுகள் வாரம் ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கான தீர்வு என்ன? என்பது அரசுக்கும் தெரியும். எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT