Published : 02 Oct 2016 11:44 AM
Last Updated : 02 Oct 2016 11:44 AM
இன்றைய தினம் காந்தி ஜெயந்தி. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் கிராம சபைக் கூட்டங்களை அதிகாரபூர்வமாக நடத்த இயலாது. ஆனால், அதிகாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் காந்தி. உங்கள் கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று இதய சுத்தியோடு திட்டமிடுங்கள். அதுவே காந்தியின் பிறந்த தினத்தன்று நீங்கள் கூட்டும் உளப்பூர்வமான கிராம சபையாக இருக்கும்.
இன்று நாடு தழுவிய அளவில் விதை சத்தியாகிரகப் போராட்டம் நடக்கிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிரான போராட்டம் அது. இதன் பின்னணியில் இருந்தே நமது கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இருக்கும் அதிகாரங்கள் என்னென்ன? இன்று அவை எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களில் முதல் அதிகாரம் வேளாண்மை. தங்கள் கிராமத்தில் பாரம்பரிய ரகங்கள் பயிரிட வேண்டுமா? மரபணு மாற்றுப் பயிர் செய்ய வேண்டுமா என்பதை கிராம சபைக் கூட்டத்திலேயே முடிவு செய்யலாம். ஆனால், நடப்பது என்ன? விவசாயிகளின் விருப்பங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் அதிகாரங்கள் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்டதாக இன்று இல்லை. ஆனால், காமராஜர் காலத்தில் இயற்றப்பட்ட 1958-ம் ஆண்டு பஞ்சாயத்துக்கள் சட்டத்தில் அந்த அதிகாரம் இருந்தது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இருந்தார்கள். விவசாய விஸ்தரிப்பு அதிகாரிகள் இருந்தார்கள். விவசாயிகளுடன் நேரடி தொடர்பு கொண்டார்கள். அந்த மண்ணுக்கு என்ன விளையும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்த மக்களுக்கு என்ன வேண்டும் என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.
ஆனால், 1982-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகாரி கள் எல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டனர். விவசாயிகள் விரும்பியதை விளைவிக்க முடியவில்லை. கடைக்கோடி விவசாயி என்ன விளைவிக்க வேண்டும் என்பதை தலைநகரங்களே தீர்மானிக்கின்றன. அரசின் கொள்கை முடிவுகளால் மூச்சுத் திணறு கின்றன கிராமங்கள். பாரம்பரிய விவசாயம் அழிந்தது. பணப் பயிர்கள் செழித்தன. மண்ணை இழந்தோம். விதையை இழந்தோம். தண்ணீரை இழந்தோம். அண்டை மாநிலங்களிடம் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்.
இப்படிதான் கல்வியும். முன்பு ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அதிகாரியின் கீழ் கல்வி விஸ்தரிப்பு அதிகாரி இருந்தார். அவரே 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் வருகைப் பதிவேடு மற்றும் மதிய உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தார். துணை ஆய்வாளர் பாடத் திட்டங்களை ஆய்வு செய்தார். ஒன்றியக் கல்விக் குழுக்கள் பள்ளிகளைப் பராமரித்தன. அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. இன்று? அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசின் கல்வித் துறைக்குச் சென்றுவிட்டன. கவனிப்பாரின்றி கிடக்கின்றன அரசுப் பள்ளிகள். 1200-க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகள் இழுத்து மூடப்படவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 43.67 லட்சத்தில் இருந்து 36.58 லட்சமாக சரிந்துவிட்டது. அதேசமயம் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் அங்கே படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. வணிகப் பண்டமாகிவிட்டது கல்வி.
இவை மட்டுமல்ல; பஞ்சாயத்துக்கள் நினைத் தால் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற் றலாம். மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களை உருவாக்கலாம். கால்நடை வளர்க்கலாம். பால் பண்ணை, கோழிப் பண்ணை அமைக் கலாம். சமூகக் காடுகள், பண்ணைக் காடு களை பராமரிக்கலாம். வனங்களில் பழங்குடி யினருக்கு சிறுவன மகசூல் அனுமதிக்கலாம். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் அமைக்கலாம். பொது சுகாதாரம் மேம்படுத்தலாம். வீட்டு வசதி, பொது விநியோகம், குடிநீர், சாலைகள், சிறு பாலங்கள், நீர்வழிப் பாதைகள், சந்தைகள், கண்காட்சிகள், சமூக சொத்துக்களைப் பராமரிக்கலாம். இப்படி மொத்தம் 29 இனங்களில் சட்டப்பூர்வமான அதிகாரங்களை இந்திய அரசியலைமைப்புச் சட்டம் (பட்டியல் 11 - பிரிவு 243 ஜி) பஞ்சாயத்துக்களுக்கு அளித்துள்ளது. சரி, எங்கே பிரச்சினை?
கொஞ்சம் வரலாற்றை பார்ப்போம்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு உருவாக்கத்தின்போது அன்றைய அதிகார பீடத்தில் இருந்தவர்களுக்கு காந்தியடிகள் சங்கடமாகவே தெரிந்தார். கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டார். நமது கிராமங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் காந்தியும் அம்பேத்கரும் இருவேறு கனவுகளைக் கண்டார்கள். அதில் முற்றிலும் முரண்பட்டார்கள். அம்பேத்கரின் கிராமங்கள் அதிகாரத்தை மையப்படுத்தும் என்றார் காந்தி. காந்தியின் கிராமங்கள் சாதியத்தை மையப்படுத்தும் என்றார் அம்பேத்கர். இருவருக்கும் இடையே தவித்தார் நேரு. இறுதியாக காந்தியின் கிராம சுயராஜ்ஜிய கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலேயே பாராளுமன்ற முறையிலேயே சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும் காந்தியின் இடையூறாத தலையீட்டால் வேறுவழியில்லாமல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பாகம் 4-ல் ‘மாநிலங்களின் உள்ளாட்சிகளுக்கான வழிகாட்டுதல் குறிப்பு’ (Directive principles of state policy) என்கிற 40-வது சட்டப் பிரிவில் ‘பஞ்சாயத்துக்களை அமைத்தல்’ என்கிற தலைப்பைப் புகுத்தினார்கள். அந்த சட்டப் பிரிவு, “மாநில அரசு கிராமப் பஞ்சாயத்துக்களை அமைக்க வேண்டும். அவை சுயாட்சி அலகுகளாகச் செயல்பட அதிகாரங்களும் உரிமைகளும் வழங்கலாம்” என்கிறது. அதாவது, ‘வழங்க வேண்டும்’ என்று ஆணித்தரமாக குறிப்பிடவில்லை. காந்தி சொல்லிவிட்டார் என்பதால் வேண்டாவெறுப்பாக ‘வழங்கலாம்’ என்று சட்டப் பிரிவை இயற்றிவிட்டார்கள். அதுதான் இன்றைக்கும் தொடரும் அவலங்களுக்கு எல்லாம் அச்சாணி.
விளைவு? இன்றைய கிராமங்கள் காந்தி விரும்பிய கிராமங்களாகவும் இல்லை. அம்பேத்கர் விரும்பிய கிராமங்களாகவும் இல்லை. இருவரின் கனவுகளும் சிதைந்துப் போயின. அதிகாரம் குவிந்துக்கிடக்கிறது. அந்நியமயமாதல் அதிகரித்துவிட்டது. சாதியம் சாகடித்துக்கொண்டிருக்கிறது.
இடையே பல்வந்த்ராய்ஜி மேத்தா கமிட்டி உள்ளாட்சிகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்தது. அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1958-ல் சென்னை ஊராட்சிகள் சட்டம் மற்றும் சென்னை மாவட்ட வளர்ச்சி மன்றச் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டன. அதில் கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு இனங்களில் பஞ்சாயத்துக்களுக்கு சுய அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நல்ல அம்சங்கள் இருந்தன. ஆனால், மாநிலக் கட்சிகளின் அதிகார வேட்கையினால் அவையும் நீர்த்துப்போயின. மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த கால்நடை விஸ்தரிப்பு அதிகாரி, மீன் வளர்ச்சி அதிகாரி, தொழில் விஸ்தரிப்பு அதிகாரி, கதர் விஸ்தரிப்பு அதிகாரி, சமூக வளர்ச்சி அதிகாரி, கிராம மருத்துவர்கள், கிராம நல ஊழியர்கள் என எல்லோரும் காலப்போக்கில் காணாமல் போனார்கள்.
முன்னத்தி ஏர் என்பார்கள். அப்படி நம் தேசம் என்னும் வண்டியை முன்னிழுத்துச் செல்லும் முன் சக்கரங்கள்தான் உள்ளாட்சி அமைப்புகள். மத்திய அரசும் மாநில அரசும் பக்கபலமாக இருக்க வேண்டிய பின் சக்கரங்கள். ஆனால், முன் சக்கரங்களின் பற்களைப் பிடுங்கிவிட்டு அவற்றை பின் சக்கரங்களில் பொருத்துகிறார்கள். வண்டியின் பின்சக்கரம் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் முன் சக்கரங்களை அவை மிஞ்ச முடியாது; மாறாக மண்ணுக் குள்ளே புதையும் என்கிற அறிவியலை ஆட்சியாளர்கள் அறியவேயில்லை!
- பயணம் தொடரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT