Published : 11 Sep 2022 06:42 PM
Last Updated : 11 Sep 2022 06:42 PM
மதுரை: டிஆர்பி தேர்வு மூலம் விரைவில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும் என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடப்புக் கல்வியாண்டில் முதுநிலை வகுப்புகளுடன் இளங்கலை வகுப்புகளை தொடங்கி நடத்த நிர்வாகம் முயற்சி எடுத்தது. இதன்படி, பிகாம், பிஏ, தமிழ், ஆங்கிலம், உளவியல் உள்ளிட்ட பாடப்பிரிவு பிரிவுகள் உருவாக்கப்பட்டு அதற்கான மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கான வகுப்புக்கள் தொடக்கவிழாவில் தமிழக உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி பங்கேற்று, புதிய மாணவர்களுக்கான சேர்க்கை அட்டைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் தொடக்க காலத்தில் சென்னை, அண்ணாமலை பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. தென்மாவட்ட மாணவர்களின் வசதிக்கேற்ப 3-வது தொடங்கியது காமராசர் பல்கலைக்கழகம். இன்றைக்கு ஏராளமானோர் இங்கு ஆராய்ச்சி உட்பட பல்வேறு முதுநிலை பாடப்பிரிவுகளில் படித்து பட்டம் பெறுகின்றனர்.
மேலும், இப்பல்கலைகழகத்தில் இளங்கலை வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் பட்டப்படிபுகளில் முதல் இரண்டு ஆண்டு அதாவது 4 செமஸ்டர்களில் தமிழ், ஆங்கிலம் பாடங்களை கட்டாயம் படித்து, மூன்றாமாண்டில் சம்பந்தப்பட்ட பாடத்திலும் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மேலும், கலை, அறிவியல் தொடர்பான பல்கலைக்கழகங்களில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் பாடப் பிரிவுகளை உருவாக்க பேராசிரியர்கள், நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். மதுரையிலுள்ள தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்து பாடத்திட்டங்களில் வேலைவாய்ப்புக்கான மாற்றம் கொண்டு வர வேண்டும்.
காமராசர் பல்கலைக்கழக கல்லூரியை கல்லூரியாக மாற்றும் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு விரைவில் டிஆர்பி தேர்வு நடத்தப்படும். கவுரவ விரிவுரையாளர்கள் பணி அனுபவத்திற்கான ஆண்டுகளை கணக்கில் எடுத்து கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என, முதல்வரே அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர்களுக்கு நிம்மதியாக இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த முடியும். காமராசர் பல்கலைக்கழகத்தில் இனிமேல் சம்பளச் பிரச்சினை இருக்காது. இதுவே முதல்வரின் விருப்பம்.'' இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT