Published : 11 Sep 2022 05:51 PM
Last Updated : 11 Sep 2022 05:51 PM
புதுச்சேரி: தமிழ் வளர்ச்சித்துறை அமைக்காததாலும், தமிழ் மொழி தொடர்பான விருதுகளை தராததால் பாரதி சிலையிடம் கோரிக்கை மனு தர பேரணியாக சென்ற பாரதிதாசன் பேரன், பல்வேறு அமைப்பினர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை தலைவரும் பாரதிதாசன் பேரனுமான கோ.செல்வம் தலைமையில் பல்வேறு தமிழ் மற்றும் சமுக ஜனநாயக அமைப்புகள் இணைந்து, ''தமிழ்நாட்டில் உள்ளது போல புதுச்சேரியில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும், தமிழ் மொழி தொடர்பான அனைத்து விருதுகளையும் உடனே வழங்க வேண்டும், படைப்பாளர்களுக்கு ஊக்கம் தரும் திட்டங்களை அறிவிக்க வேண்டும்'' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் பேரணியை இன்று நடத்தினர்.
பாரதிதாசன் நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கிய பேரணி சட்டப்பேரவை நோக்கிச் சென்றது. அப்போது பேரணி சம்பா கோயில் அருகில் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனைத் தெடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர், "புதுச்சேரியில் இன ஒற்றுமையில்லாத ஆட்சி, நம்மை நாமே காட்டிக் கொடுக்கும் ஒரு ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. இந்த ஆட்சியை மக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளனர். அதுபோல் பாரம்பரிய தமிழ் பண்பாட்டிற்காக போராடும் மக்களும் இருந்து கொண்டுள்ளனர். புதுச்சேரியில் தமிழ் மொழியை வளர்க்கக்கூடிய தமிழ் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்படாமல் செயல்படவில்லை. ஆனால் இந்தி மொழி வளர்ச்சிக்கு ரூ.1.45 கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் மொழி மற்றும் இனத்தை வளர்க்கத்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த விருதுகளும் வழங்கப்படவில்லை. இவைகளையும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் உள்ளோம். புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை நாடகம், கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் புதுச்சேரி, காரைக்காலில் ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்குகின்றனர். அதுவே மாகி, ஏனாமில் ரூ.16, ரூ.15 லட்சம் தரப்படுகின்றது.
புதுச்சேரி அரசு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை வேகமாக அமல்படுத்தி வருகிறது. புதிய கல்விக்கொள்கை நம் மொழியை நாம் கற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறுகின்றது. உலகில் உள்ள தலை சிறந்த அறிஞர்கள் எல்லாம் தாய் மொழியில் கல்வி கற்றவர்கள்தான். புதிய கல்விக் கொள்கையைப் பற்றி என்ன கேட்டாலும் புதுச்சேரி அரசு வாயை திறப்பதில்லை. புதுச்சேரி மாநிலம் பொருளாதாரத்தில் சீரழிந்து வருவதுடன், தாய்மொழி புறக்கணிப்பு செய்வது, நமது அடையாளங்களை மறக்கடிக்கப்படும் சூழல் உள்ளது" என்று குறிப்பிட்டார்.இதையடுத்து பாரதி சிலைக்கு இதுதொடர்பான கோரிக்கை மனுவை அளிக்க சென்ற பாரதிதாசன் பேரன் செல்வம் உட்பட பல்வேறு அமைப்பினரை தடையை மீறியதாகக் கூறி போலீஸார் கைது செய்து விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT