Published : 11 Sep 2022 04:05 PM
Last Updated : 11 Sep 2022 04:05 PM
கரூர்: மத்திய அரசு அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர் தனியார் கல்லூரி அரங்கத்தில் திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது: "ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு மின் வாரியத்தின் செயல்பாடு குறித்து தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். மின் வாரியத்தை மேம்படுத்தும் வழிவகை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியம் முற்றிலும் சீரழிக்கப்பட்டு இழுத்து மூடக்கூடிய நிலையில் இருந்தது.
மின் வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனிலும், அதற்கு ஆண்டுக்கு ரூ.16,511 கோடி வட்டியும் செலுத்தும் நிலையில் இருந்தது. அரசு மானியமாக கடந்தாண்டு ரூ.9,000 கோடி வழங்கி மின் வாரியத்தை மீட்டெடுககும் மின் நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டார். நிகழாண்டு ரூ.3,000 கோடி வழங்கியுள்ளார்.
இருப்பினும், தொடர்ந்து மத்திய அரசு, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அரசின் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மின் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கடிதஙகள் அனுப்பிவந்தன. மத்திய அரசும் அழுத்தம் கொடுத்தது. கட்டண உயர்வால் ஒரளவு சூழலை சமாளிக்கலாம். பிற மாநிலங்ளை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு. இந்நிலையில் ரூ.70 கோடி கட்டணம் செலுத்தாத நிலையிலே பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.
ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுத்தலின் பேரிலேயே மின் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் பேரில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5 கோடி நுகர்வோர்கள் உள்ள நிலையில் நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் 7,385 பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.
100லிருந்து 200 யூனிட் மின்சார கட்டணம் ரூ.4.50. இதில் அரசு மானியமாக ரூ.2.25 வழங்கப்படுகிறது. வரக்கூடிய ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வர உள்ள தொழிற்சாலைகள் கருத்தில் கொண்டு மின் உற்பத்தி திட்டங்கள் மேம்படுத்தப்படும். டேட்டா பேஸ் நிறுவனங்களுக்கு வருகின்ற ஆண்டுகளில் 2,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். மின்வாரிய கடனுக்கான வட்டி 9.5 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரையுள்ளது.கடன் சுமையை குறைக்க, உற்பத்தி நிறுவனங்களின் கட்டமைப்பு, விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.30, ரூ.50 என இருந்த நிலைக்கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மின்னகத்தில் 11 லட்சம் புகார்கள் பெறப்பட்டு 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 சதவீத கட்டண உயர்வு என்பது ஒழுங்கு ஆணையத்தின் முடிவு சமூக ஊடங்களில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன.கடந்த 2006-2011 ஆகிய 5 ஆண்டுகளில் மின் தேவை 49 சவீதம் உயர்ந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மின் தேவை 30 சதவீதம் கூட உயரவில்லை. அந்தளவுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மின் தேவை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 9,800 மெகாவாட் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகின்றன. காற்றாலை, சூரிய, அனல் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர மின் கணக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்படும்" அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT