Published : 11 Sep 2022 01:20 PM
Last Updated : 11 Sep 2022 01:20 PM
கரூர்: "வீட்டு உபயோக மின் கட்டணத்தைப் பொறுத்தவரை, அருகில் கர்நாடகா, மத்திய அரசால் ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய குஜராத் மாநிலமாக இருந்தாலும் சரி அவர்களைவிட மிக குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன" என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியது: " 100 யூனிட்டிற்குள்ளாக மினசாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை உள்ளனர். இந்த ஒரு கோடி நுகர்வோருக்கு எந்தவிதமான மின்கட்டண உயர்வும் இல்லை.
101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமாகும்.
201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 36 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகளுக்கு 72 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 82 ஆயிரம் பேர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 147 ரூபாய் 50 பைசா என்ற அளவில் குறைந்த கட்டணங்கள் மட்டுமே உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதே கட்டணங்களை அருகில் உள்ள கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில், 0 முதல் 100 யூனிட் வரை அவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே 4 ரூபாய் 30 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 100 யூனிட் வரை அனைத்து நுகர்வோருக்கும் இலவசம். குஜராத்தில், 0 முதல் 100 யூனிட் வரை 5 ரூபாய் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் மின் நுகர்வோருக்கு 4 ரூபாய் 50 பைசா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிலான மின்சாரத்தை பயன்படுத்தும் அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று தமிழக முதல்வர், 2 ரூபாய் 25 பைசா மானியமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
9 ஆயிரம் கோடி கடந்தாண்டு மானியம் வழங்கிய நிலையில், இந்த ஆண்டு 3500 கோடி அளவுக்கு அரசு மானியம் வழங்கியுள்ளது. வீட்டு உபயோக மின் கட்டணத்தைப் பொறுத்தவரை, அருகில் கர்நாடகா, மத்திய அரசால் ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய குஜராத் மாநிலமாக இருந்தாலும் சரி அவர்களைவிட மிக குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
குறு சிறு நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2 லட்சத்து 26 ஆயிரம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு 50 பைசா கட்டணம் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிலையில் உள்ள 19 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இவர்களுக்கும் 50 பைசா மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
முன்னதாக, தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மின் கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்தது. வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT