Published : 11 Sep 2022 11:25 AM
Last Updated : 11 Sep 2022 11:25 AM

தாய் மொழியில் கல்வி கற்பது அவசியம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

கருத்தரங்கு தொடர்பான புத்தகத்தை ஆளுநர் வெளியிட்டார்.

தாய் மொழியில் கல்வி கற்பது அவசியம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி பகுதி உள்ள தனியார் பள்ளியில், வித்யா பாரதி தமிழ்நாடு என்றஅமைப்பு சார்பில், தேசிய கல்விக்கொள்கை -2020 செயல்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியாவில் இதுவரை 60 மற்றும் 80-களில் இரண்டு முறை கல்விக்கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்பொழுது மூன்றாவது முறையாக கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது.

உலக மக்கள் தொகையில் தற்போது இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா விரைவில் முதல் இடத்துக்கும் வரலாம். வறுமை குறித்து சற்று பின் தங்கியுள்ளோம். அதேநேரம் இந்தியா பொருளாதார ரீதியில் வேகமாக வளரும் நாடாக உள்ளது.

சுதந்திரம் கிடைத்தபின் மகாத்மாகாந்தி கூறும்போது, ஆங்கிலேயர்கள் நம்முடைய மூளையில் இன்னும் தங்கியுள்ளனர். நம் மூளையிலிருந்து அவர்கள் வெளியே செல்ல வேண்டுமென்றால், அவர்கள் நம்மை ஆட்சி செய்த ஆண்டுகளில் பாதியாவது தேவைப்படும்.

எனவே, நாட்டை கட்டமைக்க வேண்டியது இன்றியமையதாக உள்ளது என்றார். பிரிட்டிஷ் அரசு நம்முடைய கல்வி முறையை அழித்து விட்டது. தற்பொழுது இந்தியாவில் தாய் மொழி வழி கல்வி இல்லை, நாம் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டு வருகிறோம்.

பிறமொழி கற்றுக் கொள்வது நல்லதுதான். ஆங்கிலத்தில் படிப்பதுதான் பெரியது என்று கிடையாது. பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளில் அவரவர் மொழிகளிலே படித்து வருகின்றனர்.

அறிவியல் பாடத்தை கூட அவர்கள் மொழியிலே கற்றுக் கொள்கின்றனர். அவரவர் தாய்மொழியில் படிப்பது நல்லது. ஏன் அது இந்தியாவில் முடியாது, இந்தியாவின் அறிவு களஞ்சியத்தை மீட்டெடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x