Published : 11 Sep 2022 11:09 AM
Last Updated : 11 Sep 2022 11:09 AM

மின் கட்டண உயர்வு | நியாயமற்ற மக்கள் விரோத செயல்: ஓபிஎஸ் கண்டனம்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப்படம்

சென்னை: "இந்த மின் கட்டண உயர்வு அனைத்துப் பொருட்களின் விலை கணிசமாக உயர வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளிய மக்களை வெகுவாக வாட்டி வதைக்கும். தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் விடுதிகள் ஆகியவையும் இந்தக் கூடுதல் கட்டணத்தை மக்கள்மீது சுமத்தும்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மனித குலத்தின் உயிர்நாடியாகவும், பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் விளங்குவது மின்சாரம். தொழில்கள் வளர்வதற்கும், தொழிற்சாலைகள் இயங்குவதற்கும், தொழிலாளர்கள் வாழ்வதற்கும், வேளாண் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், சேவைத் துறை செழிப்படைவதற்கும் மூல காரணமாக விளங்குவது மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

மின்சாரத்தைப் பொறுத்தவரையில், மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு, கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், விசைத் தறிக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய கட்சி திமுக. இந்தப் போலி வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், மின் கட்டண உயர்வின்மூலம் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாத கூடுதல் சுமையை தற்போது மக்கள் மீது சுமத்தியுள்ளது. திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டபோதே, அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை நான் தெரிவித்ததோடு, இந்த முடிவை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தினேன். பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, இன்று முதல் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாகவும், 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாமென்று நினைப்பவர்கள் அதனை விட்டுக் கொடுக்கலாம் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருப்பது தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இது தவிர, 2026 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு தலா ஆறு விழுக்காடு மின் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் பயன் பெறுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆட்சிக்கு வந்து ஓராண்டை கடந்த நிலையிலும், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இந்தக் கட்டண உயர்வின் மூலம், 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் கூடுதலாக ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் அளவுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும், 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் பயனீட்டாளருக்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 60 காசு வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 500 யூனிட்டிலிருந்து 600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனீட்டாளருக்கு ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் வீதத்திலும், 601 முதல் 800 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனீட்டாளருக்கு ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் வீதத்திலும், 801 முதல் 1000 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனீட்டாளருக்கு ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் வீதத்திலும், 1000 யூனிட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு 11 ரூபாய் வீதத்திலும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு 100 யூனிட், 200 யூனிட்டிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கும் முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் நீங்கலாக, இதே மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு மூலம் 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அனைவரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோன்று, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான மின் கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாத இந்தக் காலகட்டத்தில், இந்த மின் கட்டண உயர்வு அனைத்துப் பொருட்களின் விலை கணிசமாக உயர வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளிய மக்களை வெகுவாக வாட்டி வதைக்கும். தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் விடுதிகள் ஆகியவையும் இந்தக் கூடுதல் கட்டணத்தை மக்கள்மீது சுமத்தும். ஏற்கெனவே விலைவாசி உயர்வினால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்ற இந்தத் தருணத்தில், நாட்டின் பண வீக்கம் ஏறிக் கொண்டே இருக்கின்ற இந்தச் சமயத்தில், சொத்து வரி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, எரிவாயு விலை உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு என பலவற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நியாயமற்ற, மக்கள் விரோதச் செயல். ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ என்ற ரீதியில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஒருவேளை இதுதான் ‘திராவிட மாடல்’ போலும்.

ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x