Published : 11 Sep 2022 04:28 AM
Last Updated : 11 Sep 2022 04:28 AM

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது - வீடுகளுக்கு 12 முதல் 52 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மின் கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்தது. வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின் வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி, மின் நுகர்வு மற்றும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்து, கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ம் தேதி மனுக்களை சமர்ப்பித்தது.

இந்த மனுக்கள் தொடர்பாக, சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது.

இந்தக் கூட்டங்களில் பங்கேற்றவர்கள், மின் கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், மின் கட்டண உயர்வு பொதுமக்களைப் பாதிக்கும் என்று அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆனால், “பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. மேலும், கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்காதது தொடர்பாக, சில தொழிற்சாலை நிர்வாகங்கள் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

அதை விசாரித்த நீதிமன்றம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மின் கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால், ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி செப். 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேல்முறையீடு செய்தன. இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க விதித்த தடையை விலக்கியது.

இதையடுத்து, மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதேநேரம், வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பது தொடரும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும். 2026-27-ம் ஆண்டு வரை மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆண்டுதோறும் ஜுலை 1-ம் தேதி 6 சதவீத மின் கட்டணத்தை உயர்த்தவும் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் தேவையில்லை என்று கருதுவோர், மின் வாரியத்துக்கு எழுதிக் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 நிலைக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனி குடியிருப்புகளில் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தாலோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், அதற்கான ஒப்பந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல், பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படும்.

அதேபோல, ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தினர் தனித்தனியாக வசித்து வந்தால், அவர்கள் தங்களது தனித்தனி குடும்ப அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் அவர்களது வீட்டு மின் இணைப்புக்கும் பொதுப் பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மின் கட்டணம் மூலம் மின் வாரியத்துக்கு ரூ.59,435 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இதன் மூலம் 2023-24ல் மின் வாரியத்துக்கான இழப்பு ரூ.748 கோடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்கள்: மின் கட்டண உயர்வுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து நிலைக் கட்டணம் சிறிது குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறைந்த அழுத்த இணைப்பு கொண்ட தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 50 கிலோவாட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.100 நிலைக்கட்டணம் நிர்ணயிக்கத் திட்டமிட்ட நிலையில், தற்போது ரூ.75-ஆகவும், 50 முதல் 112 கிலோவாட்டுக்கு மாதத்துக்கு ரூ.325 உயர்த்த திட்டமிட்ட நிலையில் தற்போது ரூ.150-ஆகவும், 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு கிலோவாட்டுக்கு ரூ.600 உயர்த்த திட்டமிட்ட நிலையில் தற்போது ரூ.550-ஆகவும் நிலைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு?: புதிய கணக்கீட்டின்படி, 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50, 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6, 501 முதல் 600 யூனிட் வரை ரூ.8, 601 முதல் 800 யூனிட் வரை ரூ.9, 801 முதல் 1,000 யூனிட் வரை ரூ.10, 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத மின் கணக்கீடு நடைமுறைக்கு வருமா?: புதிய மின் கட்டண உயர்வு நேற்றுமுதல் அமலுக்கு வந்த நிலையில், ஒவ்வொரு 100 யூனிட்டுக்கும் வெவ்வேறு சதவீத அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “பழைய மின் கட்டண விகித்தை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோர் 100 யூனிட்டுக்கும் வெவ்வேறு சதவீதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என்றனர்.

இதற்கிடையே, திமுக தனது தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்யும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும்,

இதனால் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணச் சுமை ஓரளவுக்குக் குறையும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x