Published : 17 Oct 2016 08:07 AM
Last Updated : 17 Oct 2016 08:07 AM
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வந்த செய்தியைத் தொடர்ந்து, 10 நாட்களுக்குள் அனைத்து ஒப்பந்த குடிநீர் லாரிகளிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் “குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி தேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்” என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. அதில், “குடிநீர் வாரிய லாரிகளுக்கு கட்டாயம் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த வேண்டும். குடிநீர் வாரியம் தனது நிபந்தனைகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்திய லாரிகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும். இதனால் குடிநீர் லாரிகளால் ஏற்படும் விபத்துகள் குறையும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், வாரிய குடிநீர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து, குடிநீர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதி அலுவலகங்களிலும் ஒப்பந்த லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குடிநீர் லாரி மோதி 3 மாணவிகள் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் குடிநீர் லாரிகள் மூலம் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, அனைத்து ஒப்பந்த லாரிகளிலும் 10 நாட்களுக்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த உத்தரவிட்டிருக்கிறோம். மேலும் அனைத்து லாரிகளையும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க அறிவுறுத்தியிருக்கிறோம்.
மேலும் அனைத்து லாரிகளின் பின்புறமும், “இந்த குடிநீர் ஊர்தியை அதிவேகமாகவோ, சாலை விதிகளை மீறியோ ஓட்டினால் தகவல் தெரிவிக்கலாம்” என்று அந்தந்த பகுதி புகார் எண்களையும் குறிப்பிட்டு, ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறோம். மேலும் அனைத்து ஓட்டுநர்களும் காக்கி சீருடை அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறோம். இதை லாரி உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி உரிமையாளர் சங்க செயலர் முருகன் கூறும்போது, ‘‘புதிய லாரிகள் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டே வருகிறது. பழைய வாகனங்களுக்குதான் கருவியைப் பொருத்த வேண்டி யிருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT