Published : 10 Sep 2022 09:57 PM
Last Updated : 10 Sep 2022 09:57 PM

“நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்” - ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜாக்டோ-ஜியோவின் ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர் ஆகியோருடைய வாழ்வாதார நம்பிக்கை மாநாடு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். அரசும், அரசியலும் இரண்டறக் கலந்தது. இதனை யாராலும் பிரிக்க முடியாது. அந்த உணர்வோடுதான் நான் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன்.

அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நினைத்தாலும், அரசு ஊழியர் மாநாட்டில் அரசியல் பேசாமல் வேற எங்கே பேசுவது என்பதும் என்னுடைய எண்ணமாக அமைந்திருக்கிறது. திமுக ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நீங்கள்தான் காரணம். இந்த அரசு, உங்களது நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்று இப்போதும் நான் உறுதி அளிக்கிறேன்.

கடந்த ஆட்சியின்போது, நீங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தியதற்காக, பல வழிகளில் பழிவாங்கப்பட்டீர்கள். அந்த நடவடிக்கைகளைக் கழக அரசு அமைந்ததும், முற்றிலுமாக ரத்து செய்தோம். பணிமாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு பழைய இடங்களில் பணி வழங்கியும், காவல்துறையால் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றும், நடவடிக்கையை எடுத்தோம். போராட்டக் காலத்தை பணிக்காலமாக வரைமுறைப்படுத்தித் தந்தோம். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், கடும் நிதிநெருக்கடி இருந்தபோதும், மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், தமிழ்நாட்டின் அரசு அலுவலர்களுக்குத் தாமதமின்றி முழுமையாக ஊதியம் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு வரும்போதே, உங்களது கோரிக்கையை சிலவற்றை நிறைவேற்றும் கோப்புக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டுத்தான் இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். அதன்படி, அனைத்து வகையான, தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும், 60 வயது வரை தொடர்ந்து பணிபுரியலாம். பல ஆண்டுகளாக பணிமாறுதலின்றி இருக்கும் இப்பணியாளர்களுக்கு, இணைய வழியில் இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15 முதல் நடத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தொடக்கக் கல்விக்கென மாவட்ட அளவிலான புதிய அலுவலர் பணியிடமும், தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள் அனைத்தையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தோடு முடிந்துவிடப் போவது இல்லை. வருங்காலங்களில் இன்னும் பல அறிவிப்புகள் வரும். அரசின் நிதிநிலை சீராகச் சீராக மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும்.

மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து என்பது மிகப்பெரிய நலத்திட்டம். கோடிக்கணக்கான மகளிர் இதன் மூலம் பயனடைகிறார்கள். இருந்தாலும் இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1520 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்துக்கு ரூ.1949 கோடி ஆண்டுக்கு செலவாகிறது. காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், அண்ணா பிறந்த நாளில் இருந்து தொடங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் கருவூலத்தில் பல்லாயிரம் கோடிக்குப் பணத்தைச் சேர்க்கவேண்டும் என்பது எங்கள் இலக்கு அல்ல. நான் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணம் இருக்கவேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி இருக்கிறதா என்றால் இல்லை. அதனை உருவாக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். அப்படி நிதிநிர்வாக மேலாண்மையை மிகச்சரியாக நிர்வகித்து வருகிறோம். அதனால்தான் மற்ற மாநிலங்களைவிட அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம்.

ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் முன் வருகிறார்கள். இதன்மூலமாக தமிழகத்தில் முதலீடுகள் பெருகி, வளர்ச்சியும் பெருகி வருகிறது. இவை முழுமையான வளர்ச்சியாக மாறும்போது, அனைவரது ஆசையும் நிறைவேறும். அனைவரது கனவும் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x