Published : 10 Sep 2022 11:42 AM
Last Updated : 10 Sep 2022 11:42 AM

இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டிற்கே நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி மு.க.ஸ்டாலின்,இன்று (10.9.2022) நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார்.

முன்னதாக இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து முதல்வரின் மனைவி, பாரதிராஜா மனைவியை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். தற்போது பாரதிராஜா நலம் பெற்று இல்லம் திரும்பியதையடுத்து முதல்வர் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் ஆகியோர் இருந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் விளக்கம்: இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பியுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜாவின் மகன் மனோஜ், ''எனது தந்தை பாரதிராஜா நலமுடன் இருக்கிறார். ஆரோக்கியமாக இருக்கிறார். மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவைப் பார்க்கும் அளவிற்கு அவர் உடல்நலம் தேறி உள்ளது.இடையில் ஏதோ அவர் பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தயவுசெய்து அதுபோன்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம். என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

பாரதிராஜா இப்போது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். எல்லாமே அவருக்கு சினிமா தான். சினிமாதான் அவருடைய மூச்சு சுவாசம் எல்லாம், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நான்கைந்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப் பிரபலங்கள் நிறைய பேர் நேரில் வந்து அவரைச் சந்தித்தனர். அவர் சிகிச்சையில் இருந்தபோதே அவர் நடித்த படங்கள் எல்லாம் போட்டுக் காட்டினார். மீண்டும் 'திருச்சிற்றம்பலம்' படம் பார்க்க வேண்டும் என அவர் கேட்டார். விரைவில் குணமடைந்து அவர் அனைவரையும் சந்திக்க உள்ளார்'' என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x