Published : 06 Oct 2016 12:28 PM
Last Updated : 06 Oct 2016 12:28 PM
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை அரசு தெரிவிக்கக் கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
முன்னதாக இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோ ரைக் கொண்ட அமர்வில் டிராபிக் ராமசாமி கடந்த செவ்வாய்க்கிழமை முறையிட்டார். ஆனால், இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதையடுத்து டிராபிக் ராமசாமி இந்த மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (வியாழக்கிழமை) மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமாறு டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்கறிஞர் கணேசன் கோரினார்.
அப்போது நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன், "உடல்நிலை தொடர்பான விவரம் தனிநபர் உரிமை சார்ந்தது. தமிழக முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது புகைப்படத்தையும், அவரது உடல்நிலை அறிக்கையும் கோருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தற்காலிக முதல்வர் நியமிக்கக் கோருவதையும் ஏற்கமுடியாது. விளம்பரத்துக்காக அரசியல் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றனர்.
டிராபிக் ராமசாமி மனு விவரம்:
"கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நள்ளிரவு முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் நலமாக உள்ளார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது பத்திரிகை குறிப்பு அனுப்புகிறது. ஆனால், லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் வந்து சிகிச்சை அளித்துச் செல்கிறார். முதல்வருக்கு உண்மையிலேயே என்ன பிரச்சினை என்பது இதுவரை தெரியவில்லை.
அவர் தமிழகத்தின் மதிப்புமிக்க முதல்வர். ஆனால், அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் அவ்வப்போது பரவி வருகிறது. இதனால் தமிழக மக்கள் குழப்பத் தில் ஆழ்ந்துள்ளனர். ஆளுநர், மத்திய அமைச்சர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்த் தும்கூட முதல்வரின் உண்மையான உடல் நிலை குறித்த தகவல்களை வெளியே சொல்லவில்லை.
முதல்வரின் உடல்நிலை குறித்தும், காவிரி பிரச்சினை போன்ற முக்கிய விவகாரங்களில் அதி காரிகளுக்கு தகுந்த உத்தரவை யார் பிறப்பிக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஆளுநரின் முதன்மைச் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே, முதல்வர் பரிபூரணமாக உடல்நலம் பெற்று நலமுடன் பணிக்குத் திரும்பும் வரை தற் காலிக முதல்வரை நியமிக்க வேண்டும். அதுபோல முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மை நிலவரங்களையும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT