Published : 10 Sep 2022 07:20 AM
Last Updated : 10 Sep 2022 07:20 AM
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுத்துள்ள காவல் துறையினர், உரிய சட்ட அனுமதி பெற்று வந்தால் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுக அலுவலகத்துக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக பழனிசாமி கடந்த 8-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக அலுவலகத்துக்கு வர திட்டமிட்டுள்ளார். இதற்கேற்ப, அவரது ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் கடந்த 8-ம் தேதிசென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார்.
‘கடந்த ஜூலை 11-ம் தேதி கட்சி அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வந்தபோது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக, அங்கு குவிக்கப்பட்டிருந்த ரவுடிகள், குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் அவர் கட்சி அலுவலகம் வரும்போது, சமூக விரோதிகள் சிலர் கலவரம் செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, ஓபிஎஸ், நிர்வாகிகள் வந்து செல்ல இடையூறு இல்லாத வகையில் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்ல போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
‘மோதல் சம்பவத்தை அடுத்துசீல் வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தின் சாவி, நீதிமன்ற உத்தரவுப்படி இபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓபிஎஸ் தரப்பினர் சென்றால்,கட்சி அலுவலகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு, சட்டம் -ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே, மோதல் சம்பவத்தால் வன்முறை நிகழ்ந்தது. எனவே, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ள போலீஸார், உரிய சட்டஅனுமதியை பெற்று வந்தால் அனுமதி அளிப்பதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையில், டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூலை 11-ம் தேதி தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த கூட்டத்துக்கு தடை விதிக்க ஓபிஎஸ் முயன்றார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிடப்பட்டவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்ததுபோல, அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஒரு தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது. எனவே, மேற்படி நபர்களின் இத்தகைய முயற்சிகளைத் தடுக்கஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT