Published : 10 Sep 2022 06:18 AM
Last Updated : 10 Sep 2022 06:18 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (33). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 7-ம் தேதி விழுப்புரத்தில் இருந்து பைக்கில் கக்கனூர் வந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சுயநினைவு இழந்தார். அவரது மூளை செயலிழந்து விட்டதாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி புவனேஸ்வரி, தந்தை மனோகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதன் பேரில் நேற்று அதிகாலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் குந்தவி தேவி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சந்தோஷின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம், நுரையீரல், 2 கருவிழிகள் ஆகிய உறுப்புகளை அகற்றினர். அந்த உறுப்புக்கள் சென்னை, திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 8 பேருக்கு பொருத்தப்பட்டது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக மருத்துவ குழுவினரால் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மோகன், புவனேஸ்வரிடம் உடல் உறுப்பு தான சான்றிதழை வழங்கினார்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, மருத்துவக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆர்எம் ஓ வெங்கடேசன், மருத்துவர்கள் தீப்தி, அருண் சுந்தர், பாண்டியன்,லட்சுமி நாராயணன், சுப்பிரமணியன், தரணேந்திரன், தமிழ் குமரன் ஆகியோரை ஆட்சியர் பாராட்டினார்.
உயிரிழந்த சந்தோஷுக்கு கிரிஷிகா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. தனது குழந்தைக்கும், குடும்பத்திற்கும் தமிழக அரசு உதவிட வேண்டும் என சந்தோஷின் மனைவி புவனேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT