Published : 09 Sep 2022 03:34 PM
Last Updated : 09 Sep 2022 03:34 PM
மதுரை: "மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் விரைவில் திறக்கப்படும். ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்கும் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வரும். மீனாட்சி அம்மன் கோயில் பல அடுக்கு வாகன காப்பகம், தமுக்கம் மாநாட்டு, மையம் திறக்கப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தொடர்ந்து நடக்கின்றன" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை பாண்டிகோயில் அருகே ரிங்ரோட்டில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி இல்லத் திருமண விழா இன்று நடந்தது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மேடையில் பேசியதாவது: அமைச்சர் பி. மூர்த்தியின் மகன் திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பபை பெற்றமைக்கு மகிழ்ச்சி. அமைச்சர் பி. மூர்த்தி இதை மணவிழா என, விளம்பரம் செய்யாமல் ,கட்சியின் மண்டல மாநாடு என, விளம்பரப்படுத்தி இருந்தால் சிறப்பாக இருக்கும். அவர் எதையும் சிறிதாக நடத்துவதில்லை.
தலைவர் கலைஞரோ , நானோ பங்கேற்கும், அரசு நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், அவர் முத்திரை பதிப்பார். யாரும் செய்யாததை நான் செய்வேன் என, பிர2மாண்டம் படைப்பார். அவருக்கு சிறிதாக எதையும் நடத்த தெரியாது. அதனால் தான் அவரது மகனின் திருமணத்தை கட்சி பயன்படவேண்டும். வளர்ச்சி, உணர்ச்சி, ஆர்வம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இத்திருணமத்தை நடத்தி இருக்கிறார். ஒரு கல்லில் இருமாங்காய் என்றில்லாமல் பல மாங்காய்களை அடிப்பவர் பி. மூர்த்தி.
நமது அமைச்சரவை அமைக்கும் முன்பு யாரையெல்லாம் அமைச்சராக்கலாம் என,ஆலோசனை செய்தோம். தென்பகுதியில் பி.மூர்த்திக்கு வாய்ப்பு அளிக்க முடிவெடுத்தோம். ஆனால் அவர் கோபக்காரர் என்பதால் எனக்கு அச்சம் இருந்தது. கோபம் இருக்குமிடத்தில் தான் குணமிருக்கும் எனக் கருதி அவருக்கு வணிகவரி, பத்திரப்பதிவுத்துறையை வழங்கினோம். அச்சத்துடன் கொடுத்தோம். அவரது செயலைப் பார்த்தபோது, பொறுமையின் சிகரமாக மாறிவிட்டார்.
எனது எதிர்பார்ப்பைவிட, அரசுக்கு வருவாயை ஈட்டும் வகையில், ஏற்கெனவே நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் நிலையில், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசுகக்கு பல்வேறு வகையில் வருவாய் கிடைக்கும் பல பணிகளை நிறைவேற்றினார். நான் பொதுக்கூட்டம், மாநாட்டுக்கு செல்லும் போது, சில குறிப்புகளை தயாரித்துச் செல்வேன், திருமண நிகழ்ச்சிக்கு குறிப்பு எடுத்துச் செல்லவதில்லை. ஆனால் இத்திருமணத்திற்கு குறிப்பு கொண்டு வந்துள்ளேன்.
தமிழக பதிவுத் துறை வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.13.913 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது மிக பெரிய வரலாற்று சாதனை. மேலும், பத்திரப்பதிவுத்துறையில் திங்கள்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. கடந்த காலத்தில் இல்லை. பத்திரப் பதிவு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பத்திர பதிவு அலுவலகங்களில் இருந்த உயர் மேடை, தடுப்புகள் திராவிட மாடல் ஆட்சியில் அகற்றப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளது. போலி பத்திரப் பதிவுகளை சரிசெய்ய ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரவையில் சட்டம் இயற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பினோம். அவரும் உடேன ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவில் எங்குமில்லாத சாதனையாக இது பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பிற மாநில முதல்வர்களும் நம்மை அணுகுகின்றனர். இப்படி பி. மூர்த்தியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம் .
மூர்த்தி பெரிதா, கீர்த்தி பெரிதா என, கேட்டால் என்னை பொறுத்தவரை மூர்த்தி தான் பெரிது. இவர் மட்டுமின்றி நமது அமைச்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு அவரவர் துறைகளில் பணியாற்றுகின்றனர். இதை நாடே பார்க்கிறது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நமது ஆட்சி நடக்கிறது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நாம் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானபோது, கலைஞரின் நினைவிடம் சென்று மரியாதை செய்தேன். அப்போது, செய்தியாளர்களிடம், ‘‘ எங்களை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து பணி செய்வேன், எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவர். வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடாமல் விட்டோமே என, வருந்தும் நிலையில் பணியாற்றுவோம் ,’’ எனக் கூறினேன். அது போன்று மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையைவிட, அதிகமான பணிகளை செய்கிறோம்.
எங்கள் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதற்கு சான்று உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி. முதல்வரான பின், ஒவ்வொரு மாவட்டம், மண்டலமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றபோது, ஏற்பாடு செய்யாத நிகழ்ச்சிகளும் நடந்தன. 15 நிமிடத்தில் செல்லக்கூடிய நிகழ்ச்சிக்கு 2 மணி நேரம் வரை ஆனது. போகும் வழியில் இளைஞர்கள், பெண்கள் வரவேற்பு. நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்கள் வழங்குகின்றனர்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மூலம் , மனுக்கள் பெற்றேன். ஆட்சிக்கு வந்தபின், 75 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டம் கொண்டு வந்து, அதற்கென சிறப்பு துறை ஒன்றை துவங்கி, தொடர்ந்து கண்காணிக்கிறோம். நான் செல்லும் வழியில் ஒருவர் நின்றாலும் கூட மனு வாங்குகிறேன். மாற்றுத்திறனாளி எனில் நானே இறங்கி சென்று வாங்குவேன். மனு கொடுக்கும் சிலர் பல காலமாக மனு கொடுக்கிறோம் நடக்கவில்லை என்பர். அதெல்லாம் கடந்த கால ஆட்சி.
சிலர் மனு கொடுக்கும்போது, உங்களது உடல் நிலை பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். என் மீதும், அரசின் மீதும் மக்கள் பாசம் வைத்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிறைவேற்றுகிறோம். குறிப்பாக மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் விரைவில் திறக்கப்படும். ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்கும் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வரும். மீனாட்சி அம்மன் கோயில் பல அடுக்கு வாகனக் காப்பகம், தமுக்கம் மாநாட்டு, மையம் திறக்கப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தொடர்ந்து நடக்கின்றன. பிற மாவட்டத்திலும் பல்வேறு பணிகள் நடக்கின்றன.
இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக எம்எல்ஏக்கள் அவருடன் பேசுவதாகக் கூறுகிறார். அவரது எம்எல்ஏக்களே அவரிடம் பேசுவதில்லை. அவர் உல்டா விடுகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மக்களவை, எம்எல்ஏ, உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வி. தற்போது அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என, இரு அணியாக பிளவுப்பட்டுள்ளது. அவரது பதவி தற்காலிகமானது. நானும் நாட்டில் உயிருடன் இருக்கிறேன் என்ற காட்டுவதற்கு காமெடியை செய்கிறார்.
நாம் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். நல்லது செய்வதற்கே நேரமில்லை. கெட்டதை, பொயை திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார் பழனிசாமி. அதைப் பற்றி பேச அவசியமில்லை. நன்மைகளை செய்ய மக்கள் நமக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். மக்களுக்காக நல்லது செய்வோம். அப்படியொரு அமைச்சரவையில் பி. மூர்த்தியும் இடம் பெற்றுள்ளார்".இவ்வாறு முதல்வர் பேசினார்.இந்த விழாவில், மாநில இளைஞரணிச் செயலர் உதயநிதி வரவேற்றார். அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
எம்எம்- சிஎம் ஆக இருக்க விருப்பம்.. கடந்த 2 நாளுக்கு முன்பு நெல்லையில் சுற்றுபயணம் செய்தபோது, அப்பகுதியில் ஒட்டிய சுவரொட்டி என்னை மிகவும் கவர்ந்தது. ஏஎம் ,பிஎம் (காலை, மாலை) பார்க்காத சிஎம். என, குறிப்பிட்டு இருந்தனர். எம்எம் சிஎம் இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் மக்களுக்காக பாடு படவேண்டும் . தமிழகத்தை முதலிடத்திற்கு உயர்த்த உழைக்கிறோம்" என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT