Published : 20 Oct 2016 02:30 PM
Last Updated : 20 Oct 2016 02:30 PM
திருச்சி மாவட்ட மைய நூலக நிர்வாகத்தின் செயல்பாடுகள் நூல் ஆர்வலர்களை அதிருப்திக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
மதுரை சாலையில் பூம்புகார் விற்பனை நிலையம் எதிரேயுள்ள புதிய கட்டிடத்தில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த மைய நூலகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 1.60 லட்சம் நூல்கள் உள்ளன. தினமும் சுமார் 700 பேர் வரை வந்து செல்கின்றனர்.
இந்த நூலக நிர்வாகத்தின் கீழ் 64 கிளை நூலகங்கள், 14 பகுதிநேர நூலகங்கள், ஒரு நடமாடும் நூலகம் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், மாவட்ட மைய நூலக நிர்வாகத்தின் செயல்பாடுகள் அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்துவதுடன், நூலகத்தின் பெருமையை இழக்கச் செய்யும் வகையில் உள்ளதாக நூல் ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருடுபோன ஏசி இயந்திரங்கள்
மாவட்ட மைய நூலகத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் பிரிவு மற்றும் குடிமைப் பணிகள் பிரிவில் தலா 10 எண்ணிக்கை வீதம் 20 ஸ்பிளிட் ஏசி இயந்திரங்கள் வாங்கி பொருத்தப்பட்டன. ஆனால், அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவே இல்லை.
இதற்கு, ஏசி இயந்திரங்களை இயக்குவதற்கு போதிய மின் திறன் இல்லை என்றும், கூடுதல் உபகரணங்கள் வாங்கிப் பொருத்திய பிறகே அவற்றை இயக்க முடியும் என்றும், அதுதொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த ஏசி இயந்திரங்களை இதுவரை நூலக நிர்வாகத்திடம் பொதுப்பணித் துறை மின் பிரிவினர் ஒப்படைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பொதுப்பணித் துறை மின் பிரிவினரும் அலட்சியமாக இருப்பதாக புகார் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த மாதம் நூலகத்துக்கு வந்த பெண் ஒருவர், தன்னை பொதுப்பணித் துறை அலுவலர் என்றும், ஏசி இயந்திரங்களை சர்வீஸ் செய்ய உத்தரவு வாங்கி வந்துள்ளதாகவும் கூறி இரு வேறு நாட்களில் தலா 10 எண்ணிக்கை வீதம் 20 ஏசி இயந்திரங்களையும் நூலக அலுவலர்கள் முன்னிலையிலேயே கழற்றிச் சென்றுவிட்டார்.
பின்னர், ஏசி இயந்திரம் குறித்து எந்தத் தகவலும் வராததால், நூலகத்திலிருந்து பொதுப்பணித் துறை மின் பிரிவினரை தொடர்பு கொண்டபோதுதான் ஏசி இயந்திரங்கள் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணைப் பிடித்து, பல இடங்களில் விற்கப்பட்ட ஏசி இயந்திரங்களை கைப்பற்றினர்.
இதுகுறித்து கோட்டை குற்றப் பிரிவு போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “ஒரு பெண் கொண்டு வந்த உத்தரவை உறுதிப்படுத்தாமல் ஏசி இயந்திரங்களை எப்படி கொடுத்தனர் என்று தெரியவில்லை. கைப்பற்றப்பட்ட ஏசி இயந்திரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுவோம். நீதிமன்றம் மூலம் அவற்றை நூலக நிர்வாகம் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றனர்.
பயன்பாட்டுக்கு வராத கருவி
பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த ராமேசுவர முருகன் நூலகத் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனித்தபோது, நூல் திருட்டைத் தடுப்பதற்காக நூலகங்களில் ஆர்எப்ஐடி (radio frequency identification) தொழில்நுட்ப கருவி பொருத்த திட்டமிடப்பட்டது.
கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ரகசிக குறியீடு வில்லை ஒட்டப்பட்ட நூல்களை, பதிவு செய்யாமல் வெளியே எடுத்துச் செல்ல முயன்றால், ஆர்எப்ஐடி தொழில்நுட்ப கருவி ஒலி எழுப்பி காட்டிக் கொடுத்துவிடும். எனவே, இதன்மூலம் நூல் திருட்டு தடுக்கப்படும் என்பதே கருவி நிறுவுவதன் நோக்கம்.
அதன்படி, திருச்சி மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ.50 லட்சத்தில் ஆர்எப்ஐடி தொழில்நுட்ப கருவி பொருத்தும் பணி தொடங்கியது. ஒப்பந்ததாரருக்கு 90 சதவீதத்துக்கும் மேல் காசோலை வழங்கிவிட்ட நிலையில், இதுவரை அந்தக் கருவி பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து கடந்த ஆண்டு கேட்டபோது, “பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்று அளித்த அதே பதிலையே இப்போதும் கூறுகிறார் மாவட்ட நூலக அலுவலரான (பொறுப்பு) பாலகிருஷ்ணன்.
நூலகத் துறை இயக்குநர் பொறுப்பை பள்ளிக் கல்வி இயக்குநரான கண்ணப்பன் கூடுதலாக கவனித்து வருகிறார். நூலக அறிவியல் படித்தவரையே நூலகத் துறை இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவு இதுவரை பின்பற்றப்படவில்லை.
பள்ளிக் கல்வி துறையிலேயே பல்வேறு அலுவல்கள் இருக்கும் நிலையில், நூலகத் துறை இயக்குநர் பணியிடத்தை கூடுதல் பொறுப்பாக நியமிப்பதால் நூலகத் துறையின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் தொய்வு நிலவுவதாகவும் புகார் கூறப்படுகிறது.
புதிய கட்டிடத்துக்கு மாவட்ட மைய நூலகம் வந்தபோது, மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது வீட்டுக்கே சென்று நூல்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, போதிய ஊழியர்கள் நூலகப் பிரிவில் இல்லாததால் தொடக்க நாளோடு அந்தத் திட்டம் முடிங்கியது.
இதுகுறித்து மாவட்ட மைய நூலக வாசகர்கள் சிலர் கூறியபோது, “மக்கள் அளிக்கும் வரிப் பணத்தில் ஒரு பகுதி நூலகங்களுக்கு ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நிதி முறையாகச் செலவிடப்படுவது நூலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நூலக நிதியில் முறைகேடு நிகழாமல் இருக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.
பாடப் புத்தகங்களைத் தாண்டி வெளியுலக சவால்களை எதிர்கொள்ள உதவும் பொது அறிவை மேம்படுத்த நூலகங்களே உதவும். ஆனால், அந்த நூலக வளர்ச்சிக்கென அரசு செய்யும் நல்ல திட்டங்கள் குறித்த நேரத்தில் நிறைவேற்றப்படவில்லையெனில், அந்த நோக்கம் சிதைந்துவிடும். இதை நூலக அலுவலர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பு.
நூல் ஆர்வலர்கள் அடங்கிய குழு தேவை
இதுகுறித்து நூல் ஆர்வலரும், பட்டிமன்ற பேச்சாளரும் கவிஞருமான நந்தலாலா கூறியபோது, “ஏசி இயந்திரங்கள் நூதன முறையில் திருடுபோனது நூலக அலுவலர்களின் அலட்சிய செயல்பாட்டையே காட்டுகிறது. நூலகத்துக்கு ஆட்களை நியமிக்கும்போது நூல்கள் மீது ஆர்வம் உள்ளவரா என்று ஏதாவது ஒரு வழியில் ஆய்வு செய்து நியமிக்கும் வழிமுறை குறித்து அரசு யோசிக்க வேண்டும்.
நூல் ஆர்வலர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி, நூலகத்துக்கு அரசு ஒதுக்கும் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா, செலவழிக்கப்பட்ட திட்டம் பயன்பாட்டில் உள்ளதா என்று ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அனுப்புவதன் மூலம் நூலகத்தின் வளர்ச்சியை நிச்சயமாக மேம்படுத்த முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT