Published : 03 Oct 2016 09:55 AM
Last Updated : 03 Oct 2016 09:55 AM
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயோ கழிப்பறை உட்பட 10 வகையான புதிய வசதிகள் கொண்ட நவீன முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை ஐசிஎப் தயாரித்து வருகிறது. இதில், 25 புதிய பெட்டிகள் அடுத்த 6 மாதங்களில் தெற்கு ரயில்வேக்கு வழங்கப்படுகின்றன.
இந்திய ரயில்வேயின் கீழ் 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப் படுகின்றன. நாடு முழுவதும் தினமும் சராசரியாக 2.36 கோடி பேர் பயணம் செய்கின்றனர். சுமார் 27 லட்சம் டன் சரக்கு கையாளப்படுகிறது. மக்களின் அன்றாட போக்குவரத்து தேவையில் ரயில் போக்குவரத்து முக்கியமானதாக இருக்கிறது. புதியதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் தனியார் துறையுடன் இணைந்து பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விரைவு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளை மேம்படுத்தி பல்வேறு புதிய வசதிகளைக் கொண்ட நவீன ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது.
தற்போது, இந்த நவீன பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) நடைபெற்று வருகின் றன. வரும் மார்ச் மாதத்துக்குள் மொத்தம் 350 பெட்டிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித் துள்ளது.
10 புதிய வசதிகள்
இது தொடர்பாக ஐசிஎப் உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஒவ்வொரு விரைவு ரயிலிலும் தலா 4 பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இணைக் கப்பட்டு இயக்கப்படுகிறது. எனவே, சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் ‘தீனதயாலு’ என்ற பெயரில் 10 புதிய வசதிகள் கொண்ட பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் ஐசிஎப்-பில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த பெட்டியில் சுமார் 2000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பயோ கழிப்பறை, எல்இடி விளக்குகள், ஏறும், இறங்கும் வழிகளில் நவீன கைப்பிடி, ஒவ்வொரு பெட்டியிலும் 22 இடங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உட்பட 10 சிறப்பு அம்சங்கள் இருக்கும். வழக்கமாக ஒரு பெட்டியை தயாரிக்க ரூ.80 லட்சம் செலவாகும். ஆனால், இந்த புதிய வகையான பெட்டிகளை தயாரிக்க கூடுதலாக ரூ.10 லட்சம் வரை செலவாகும்.
வரும் மார்ச் மாதத்துக்குள் மொத்தம் 350 பெட்டிகளை தயாரிக்க உள்ளோம். மொத்தமுள்ள 16 ரயில்வே மண்டலங்களுக்கும் புதிய பெட்டிகள் பகிர்ந்து அளிக்கப்படும். இதில், தெற்கு ரயில்வேக்கு மட்டும் 25 பெட்டிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT