Published : 09 Sep 2022 03:23 AM
Last Updated : 09 Sep 2022 03:23 AM
குமுளி: தமிழக கேரள எல்லையான குமுளியில் கனமழையினால் மலைச்சரிவில் உள்ள ராட்சத மரங்களின் அடிப்பகுதிவரை மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேர்கள் பிடிப்பின்றி அந்தரத்தில் இருக்கும் மரங்கள் சாலையில் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் முக்கிய வழித்தடமாக குமுளி மலைப்பாதை அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள், சபரிமலை ஐயப்ப பக்தர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்தச் சாலையையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் இருந்து 6 கிமீ மலைச்சாலை வழியேதான் குமுளிக்கு செல்ல வேண்டும். கேரள வனத்துறையின் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் இந்த சாலை அமைந்துள்ளது.
கடந்த வாரம் பெய்த கனமழையினால் அதிகளவில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நீர் மலைச்சரிவில் உள்ள ராட்சத மரங்களுக்கு இடையே புகுந்து அதிவேகத்தில் கடந்து சென்றதால் மரங்களுக்கு கீழ் உள்ள மண் வெகுவாய் அரிக்கப்பட்டது. மேலும் சாலையோர மண்திட்டுக்களில் உள்ள மரங்களின் அடிப்பகுதி மண்ணையும் வெகுவாய் அரித்துச் சென்றது. இதனால் குமுளி மலைச்சாலையின் பல இடங்களிலும் ராட்சத மரங்களின் வேர்கள் மண்பிடிப்பின்றி அந்தரத்தில் உள்ளன. சாலையோரத்தில் உள்ள பல மரங்கள் சாய்வாக அபாயகரமான நிலையிலும் இருக்கின்றன.
பலத்தகாற்று அல்லது மீண்டும் கனமழை பெய்தால் இந்த மரங்கள் சரிந்து சாலையில் விழும் நிலை உள்ளது. ஆகவே பிடிப்பின்றி கிடக்கும் வேர்பகுதியில் மண்ணை மேவி மரங்களை வலுப்படுத்த வேண்டும். மேலும் மண் அரிப்பு இல்லாமல் மழைநீர் கடந்து செல்லும் வகையில் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், "கனமழைக்குப் பின் இப்பகுதி கண்காணிப்பிலே இருந்து வருகிறது. தொடர் ஈரப்பதம் சாலையோர மரங்களின் பிடிப்புத்தன்மையை வெகுவாய் குறைத்து விடுகிறது. அவ்வப்போது கிளைகளை அகற்றி பலப்படுத்தி வருகிறோம். மரங்களுக்கு பாதிப்பின்றி மழைநீர் கடந்து செல்லவும், மரங்களை வலுப்படுத்தவும் பல பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT