Published : 08 Sep 2022 10:27 PM
Last Updated : 08 Sep 2022 10:27 PM

அரங்கிற்கு வெளியே திமுக கவுன்சிலர்களை சந்தித்த ஸ்டாலின்; தமுக்கம் விழா அரங்கினுள் அனுமதிக்காததால் அதிருப்தி

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தமுக்கம் பல்நோக்கு மாநாட்டு மையம் திறப்பு விழா அரங்கில் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியடைந்தனர். பின்னர் விழா அரங்கிற்கு வெளியே நின்றிருந்த கவுன்சிலர்களை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்தார்..

மதுரை தமுக்கம் மைதானத்தில் ரூ.47.72 கோடியில் பல்நோக்கு மாநாட்டு மையம் அரங்கு திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடந்தது. இந்த அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள், மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர், எம்பி, எம்எல்ஏ-க்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மண்டலத் தலைவர்கள், மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் விழா நடந்த பல்நோக்கு மாநாட்டு மையம் அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் விழா நடந்த அரங்கிற்கு வெளியே அமர வைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவுக்கு காரில் வந்து இறங்கிய ஸ்டாலின் நேரடியாக விழா நடந்த பல்நோக்கு மாநாட்டு மையத்தின் உள் அரங்கிற்குள் சென்றுவிட்டார். அங்கு அவர் அந்த அரங்கை திறந்து வைத்தார்.

முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பங்கேற்கும் மாநகராட்சி நிகழ்ச்சி என்பதால் திமுக மற்றும் அதன் கூட்டணி கவுன்சிலர்கள் முதல்வர் ஸ்டாலினை பார்க்கவும், அவருடன் இந்த விழாவில் பங்கேற்கவும் ஆர்வமுடன் திரண்டு வந்தனர். ஆனால், விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியடைந்தனர். அவர்களுக்குள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துக் கொண்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக விழா அரங்கிற்கு வெளியே கவுன்சிலர்கள் காத்திருக்கும் தகவல் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதனால், முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி முடிந்து பல்நோக்கு மாநாட்டு அரங்கை விட்டு வெளியே வந்தபோது அவரைப் பார்க்க கவுன்சிலர்களை பல்நோக்கு மாநாட்டு மையம் வாயில் அருகே வர அறிவுறுத்தப்பட்டனர். ஸ்டாலின் கவுன்சிலர்கள் அருகே சென்று கை அசைத்து, கவுன்சிலர்கள் கொடுத்த புத்தகங்கள், சால்வையை வாங்கி கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

ஸ்டாலின் வந்து பார்த்ததால் கவுன்சிலர்கள் ஒரளவு திருப்தியடைந்தனர். ஆனாலும், விழா முடிந்த பின்னர் கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் கூடி நின்று, "நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு எப்படி எங்களை அழைக்காமல் இருக்கலாம்" என்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதன்பின்னர் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் ஆகியோர் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களை விழா நடந்த பல்நோக்கு மாநாட்டு உள் அரங்கிற்கு அழைத்து சென்ற ‘குரூப்’ புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஆனாலும், இந்த விழாவில் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக திமுக கவுன்சிலர்கள் அதிருப்தியுடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். மேயருடனான மோதலால் சில திமுக கவுன்சிலர்கள், இந்த விழாவுக்கே வரவில்லை. ஏற்கெனவே, மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் திரைமறைவு மோதல் இருக்கும் நிலையில் மாநகராட்சியின் இந்த நிகழ்ச்சி மேலும் அவர்கள் இடையே புகைச்சலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x