Published : 08 Sep 2022 10:09 PM
Last Updated : 08 Sep 2022 10:09 PM
சென்னை: “தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: “தீப்பெட்டி உற்பத்தி தொழில் தமிழகத்தின் தென்பகுதியில் வேலைவாய்ப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஒரு பாரம்பரியத் தொழிலாகவும் உள்ளது. இத்தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். அப்பணியாளர்களில் பெரும்பாலோர் பெண்களாவர். மேலும், விவசாயம் செய்ய இயலாத வறண்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரமாக இத்தொழில் விளங்குகிறது. தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.400 கோடி அந்நிய செலாவணி வருவாய் ஈட்டப்படுகிறது.
தற்போது தொழில் துறை மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், ஏற்றுமதி சந்தையில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், கோவிட் பெருந்தொற்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட விநியோக சங்கிலி இடையூறுகள், ஏற்றுமதி தொடர்புடைய செலவீனம் மற்றும் நடைமுறை சிரமங்கள் மேலும் அதிகரித்துள்ளது, உள்ளீட்டு செலவுகளும் பெருமளவு அதிகரித்துள்ளது.
மேலும், சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்படியாகவும் சட்டவிரோதமாகவும் இறக்குமதி செய்யப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் வரவால் தீப்பெட்டித் தொழிலின் உள்நாட்டு சந்தை வாய்ப்பு வேகமாக குறைந்து வருகிறது.
இந்த சிகரெட் லைட்டர்கள் ரூ.10-க்கு கிடைப்பது 20 தீப்பெட்டிகளுக்கு மாற்றாக இருக்கும். இருப்பினும் அவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதுடன், அதில் பயன்படுத்தும் எரிபொருளின் சுகாதார தாக்கம் இன்னும் அறியப்படவில்லை. இவ்வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் தொடர்ந்து சந்தையைக் கைப்பற்றினால், தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.
எனவே, இந்த விஷயத்தில் ஒன்றிய அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை தடை செய்யுமாறும், சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறேன்” என்று தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment