Published : 08 Sep 2022 09:24 PM
Last Updated : 08 Sep 2022 09:24 PM
நாகர்கோவில்: “கன்னியாகுமரியில் இருந்து நான் மேற்கொண்டுள்ள யாத்திரை, மக்களை பிரிவினையில் இருந்து ஒன்றிணைப்பதற்கான யாத்திரை” என்று தனது நடைபயணத்தின்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி 2- வது நாள் யாத்திரையில் வியாழக்கிழமை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து சுசீந்திரத்திற்கு வந்தார். பின்னர் மாலையில் சுசீந்திரத்தில் இருந்து நாகர்கோவில் கிறிஸ்தவக் கல்லூரி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
அவர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டெரிக் சந்திப்பு வந்ததும், அங்குள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் கூடிநின்ற தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.
அதனைத் தொடர்ந்து அருகே அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் ஏறி, தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும்போது, "இனவாரியாக, தேசியவாரியாக இந்த சமூகம் பிரித்தாளப்பட்டிருக்கிறது. எனது இந்த நடைபயணம் என்பது ஒன்றிணைப்பதற்கான யாத்திரை.
தேசம் என்பது ஒட்டுமொத்தமாக ஒற்றுமையாக இருந்தால்தான் பலமாக இருக்கும். இல்லையென்றால் மீண்டும் ஒரு மோசமான நிலை இந்த நாட்டிற்கு ஏற்படும்" என்ற ராகுல் காந்தி கூடியிருந்த அனைவருக்கும் நன்றி கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.
பின்னர் அங்கிருந்து ஸ்காட் கல்லூரிக்கு நடைபயணம் மேற்கொண்டு தனது 2-வது நாள் நடைபயணத்தை நிறைவு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT