Published : 08 Sep 2022 07:23 PM
Last Updated : 08 Sep 2022 07:23 PM

“நெல்லை சரித்திரத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயர்” - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விருப்பம்

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: "தமிழக முதல்வர் நெல்லைக்கு அடிக்கடி வரவேண்டும். முதல்வரின் வருகையால் அனைத்து சாலைகளும் நிச்சயமாக வேலை பார்க்கப்படுகிறது, பழுதுபார்க்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. எனவே முதல்வர் அடிக்கடி வந்து நிறைய நலத்திட்டங்களை எங்களுக்கு தர வேண்டும்" என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், ரூ.74.24 கோடி செலவில் 29 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.156.28 கோடி மதிப்பீட்டிலான 727 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,658 பயனாளிகளுக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர், "உண்மையில் இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் என்னை எதிர்க்கட்சி, மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்றுகூட பாராமல், எனது திருநெல்வேலி தொகுதிக்கு ஒரு கலைக்கல்லூரியை பெருமையோடு தந்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு ரூ.15 கோடி ஒதுக்கி தந்து, நமது மாவட்டத்தை இவ்வளவு கரிசனையோடு பார்ப்பதற்காக முதல்வருக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

பெரும்பாலும், ஒவ்வொருவரும் முதல்வராக வரும்போது, அவர்களது சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் ஒவ்வொரு காரியங்களை செய்வது உண்டு. எனக்கு ஒரு ஆசை. திருநெல்வேலி மாவட்டத்தின் சரித்திரத்தில், நமது முதல்வரின் பெயரும் இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கு முதல்வர் செய்ய வேண்டிய காரியம், மணிமுத்தாறு பாபநாசம் இரண்டு அணைகள் இருக்கிறது. இரண்டு அணைகளையும் சுரங்கம் மூலம் இணைத்துவிட்டால், இந்த மாவட்ட மக்களுக்கு எல்லா காலங்களிலும் அதன்மூலம் நீர் நிறைந்து கொண்டேயிருக்கும்.

இது சாத்தியமா, இதனை மத்திய அரசுதானே செய்ய வேண்டும் என்றுகூட கூறலாம். இது மாவட்ட மக்களின் பிரச்சினை, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை. மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் முதல்வர் அவரது காலத்திலே அதை செய்துதர வேண்டும் என்று அன்போடு நெல்லை மாவட்ட மக்களின் சார்பாக வேண்டுகோள் வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

நெல்லை மாவட்டத்தில்தான் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய சிலைகள் எல்லாம் நினைவுத் தூண்களாக இங்கே வைக்கப்பட்டிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரும் நடுநாயகமாக அந்த எழுத்தாளர் பட்டியலில் இருப்பதை முதல்வர் பார்த்து வந்தார். அதேபோல் சுதந்திர போராட்ட வீர்களும் உள்ளனர்.

அதே போல், மானூர் குளத்திற்கு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும், வெள்ள நீர் தடுப்பு, உள்ளிட்ட பல்வேரு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

மேலும், முதல்வர் அடிக்கடி நெல்லைக்கு வரவேண்டும். அடிக்கடி வந்தால், அனைத்து சாலைகளும் நிச்சயமாக வேலை பார்க்கப்படுகிறது, பழுதுபார்க்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. எனவே முதல்வர் அடிக்கடி வந்து நிறைய நலத்திட்டங்களை தர வேண்டும்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x