Published : 08 Sep 2022 05:52 PM
Last Updated : 08 Sep 2022 05:52 PM
சென்னை: “நீட் தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது; மாணவச் செல்வங்கள் மன உறுதியுடன் செயல்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ''நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வு முடிவு வெளியாகும் போதே என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது வேதனையளிக்கிறது. நீட் தோல்வியைக் கண்டு மாணவர்கள் துவளக்கூடாது. மன உறுதியுடன் செயல்பட்டு மீண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் பெற 234 நாட்கள் ஆயின. நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 129 நாட்களாகும் நிலையில், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது மட்டும் தான் மாணவச் செல்வங்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றும். எனவே, நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று, மாணவச் செல்வங்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT