Published : 08 Sep 2022 01:26 PM
Last Updated : 08 Sep 2022 01:26 PM
ரூ.2,000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் ஒன்பது நிலை ராஜகோபுரம் அமைக்கும் இடத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவை கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சுவர் அமைக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக, கோயிலுக்கு அருகாமையில், 24 மணி நேரமும் செயல்படும் சிறிய மருத்துவமனை அமைக்கப்படும், என்றார்.
தொடர்ந்து, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
திமுக ஆட்சி அமைந்த ஓராண்டில் 300 கோயில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. சேலம் சுகனேஸ்வரர் கோயில், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் தற்போது நடக்கிறது.
கோட்டை மாரியம்மன் கோயிலில் மார்ச் மாதத்துக்குள் திருப்பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். கோயில்களில் அன்னைத்தமிழில் வழிபாடு செய்யும் வகையில், 14 போற்றிப் புத்தகங்களை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. தமிழில் அர்ச்சனை செய்ய வசூலிக்கப்படும் கட்டணத்தில், 60 சதவீதத்தை அர்ச்சகருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி அமைந்தபின் ரூ.2,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நில மீட்பு தொடரும், என்றார்.
சேலத்தில் ஆய்வு: முன்னதாக, சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயில், கோட்டை மாரியம்மன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.
அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT