Published : 08 Sep 2022 06:53 AM
Last Updated : 08 Sep 2022 06:53 AM

இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கும், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்டவற்றை, கரோனாவின் அறிகுறிகளாக மட்டும் கருதக்கூடாது.

அவை பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றாக இருக்கலாம். எனவே, அவற்றுக்கு உரிய வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், நேரடியாக நுரையீரலைப் பாதிக்கும். இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொருத்து, மருத்துவர்கள் அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும். மிதமான பாதிப்பு இருந்தால், அதற்கான மருந்துகளை மட்டும் அளிக்கலாம்.

அதேநேரத்தில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஓசல்டாமிவிர் எனப்படும் மருந்து வழங்க வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்தி, மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்களை ஓசல்டாமிவிர் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x