Published : 08 Sep 2022 06:42 AM
Last Updated : 08 Sep 2022 06:42 AM
சென்னை: போதைப் பொருட்கள் கடத்த துணைபுரியும் கூரியர் நிறுவனம் மற்றும் மருந்து கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மருந்துக் கடை உரிமையாளர்கள், மருந்து விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர், சர்வதேச கூரியர் நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காவல் துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தூக்கம், மயக்கம் தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. மருந்து விற்பனை விவரங்களை முறையாகப் பதிவேட்டில் பதிவுசெய்து, பராமரிக்க வேண்டும்.
அனைத்து மருந்துக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவேண்டும். போதை தரும் மருந்து, மாத்திரைகளை இளைஞர்கள், சிறுவர்கள் வாங்கினால், அதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக, அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்களை மருந்துக் கடையின் வெளிப்புறத்தில் எழுதிவைக்க வேண்டும்.
அதேபோல, அதுபோன்ற மாத்திரைகளைக் கேட்டு தொந்தரவு செய்வோர் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றெல்லாம் மருந்துக் கடைக்காரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், போதை அளிக்கக் கூடிய மருந்து, மாத்திரைகளை, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தரும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
அதேபோல, கூரியர் நிறுவனங்களில் பார்சல்களை அனுப்புவோர் மற்றும் பெறுவோரின் முகவரி, அடையாள ஆவணங்களை சரிபார்த்த பின்னரே பார்சல்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், பார்சல்களில் அனுப்பப்படும் பொருட்களின் விவரம் மற்றும் ஆவணங்களை நன்கு சரிபார்க்க வேண்டும்.
வெளி மாநிலம் மற்றும் சர்வதேச பார்சல் அனுப்பும்போது, அனுப்புநரின் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்களை பதிவேடுகள் மற்றும் இ-பதிவு மூலம் குறைந்தபட்சம் 5 வருடங்களுக்காவது பத்திரப்படுத்திவைத்து, காவல் துறையினர் கேட்கும்போது அளிக்க வேண்டும்.
பார்சல்களில் போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத, தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்றும் சரிபார்க்க வேண்டும். அதேபோல, பார்சல்களை டெலிவரி செய்யும்போதும், மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
பார்சல்களில் சந்தேகப்படும்படியான பொருட்களோ அல்லது சட்டவிரோதப் பொருட்களோ இருப்பதைக் கண்டறிந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.
காவல் துறையின் அறிவுரைகளை மீறி செயல்படுவோர் மற்றும் போதைப் பொருட்களை அனுப்புவதற்கு துணைபுரியும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT