Published : 08 Sep 2022 06:59 AM
Last Updated : 08 Sep 2022 06:59 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் பெரிய கோட்டமாகத் திகழும் சென்னை ரயில்வே கோட்டத்தில், விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள், அதிவிரைவு ரயில்கள், மெயில் ரயில்கள் என்று 300-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சில ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகள் உயர்த்தப்படாததால், பயணிகள் நடைமேடைகளுக்கு கீழ் இறங்கி, நடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், சில ரயில் நிலையங்களில் ரயில்களின் படிகளுக்கும், நடைமேடைக்கும் இடையே 3 அடிவரை இடைவெளி இருக்கிறது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
இதற்குத் தீர்வுகாணும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 13 ரயில் நிலையங்களில் உள்ள 25 நடைமேடைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் நடைமேடைக்கும், ரயில் படிக்குமான இடைவெளி சற்று அதிகமாக இருப்பதால், பயணிகள் சிரமப்படுவதாக புகார்கள் வந்தன.
எனவே, சென்னை எழும்பூர்-விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு, கிண்டி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கூடுவாஞ்சேரி, மாம்பலம், பெருங்களத்தூர், வண்டலூர், திண்டிவனம் உள்ளிட்ட 13 நிலையங்களில் உள்ள 25 நடைமேடைகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இந்த நடைமேடைகளில் அரைஅடி முதல் இரண்டு அடி வரைநடைமேடை உயரம் அதிகரிக்கப்படும். இந்தப் பணிக்காக ரூ.3 கோடி நிதி செலவிடப்பட உள்ளது. இந்தப் பணிகளை 11 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளோம். இதற்காக, கடந்த மாதம் 26-ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. வரும் 14-ம் தேதி ஏலம் தொடங்கும். வரும் 28-ம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. அதன் பிறகு பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT