Published : 07 Sep 2022 04:27 PM
Last Updated : 07 Sep 2022 04:27 PM

'பாரத் சோடோ யாத்திரை'தான் நீங்கள் நடத்த வேண்டும்: ராகுலை கிண்டல் செய்த அண்ணாமலை

அண்ணாமலை, ராகுல் காந்தி | கோப்புப் படம்.

சென்னை: ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கும் நிலையில், அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இது சுதந்திர இந்தியா. இங்கு யார் வேண்டுமானாலும் யாத்திரை செல்லலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை. அந்த வகையில் ராகுல் காந்திக்கும் உரிமை உண்டு. அதனால்தான் நான் அவரது யாத்திரைக்கு வாழ்த்தும் கூட சொல்லியிருக்கிறேன். ஆனால், அவர் இந்த யாத்திரை எதற்காக மேற்கொள்கிறார் என்பதில்தான் விஷயம் இருக்கிறது.

இந்தியாவின் ஒற்றுமைக்காக யாத்திரை மேற்கொள்வதாக ராகுல் காந்தி கூறுகிறார். கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் ஒற்றுமையில் எந்தக் குறையும் இல்லை. பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் புதிய இந்தியா பிறந்துள்ளது. ராகுல் காந்தி தனது யாத்திரையில் அந்தப் புதிய இந்தியாவைக் காண்பார். ஏனெனில் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவார். அவருக்கு இங்கு என்ன நடக்கிறது என்பது முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எப்போதும் பாரத் சோடோ யாத்திரை 'Bharat Chhodo' (இந்தியாவை விட்டு வெளியே செல்லுதல்) மேற்கொண்டவருக்கு இந்த யாத்திரை புதிய இந்தியாவை அறிமுகப்படுத்தும். அதனால்தான் அவரை நான் ட்விட்டரில் நீங்கள் பாரத் சோடோ யாத்திரை செய்யுங்கள் என்று விமர்சித்திருந்தேன்.

ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தா ஜவஹர்லால் நேரு இந்நாட்டின் பிரதமராக இருந்திருக்கிறார். அவருடைய பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருந்திருக்கிறார். அவருடைய தந்தை ராஜீவ் காந்தியும் இந்நாட்டின் பிரதமராக இருந்திருக்கிறார். ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று பிரதமர்கள் இருந்துள்ளனர். ஆனால், அத்தனை பேருமே இந்தியாவை ஒற்றுமைப்படுத்த முடியாமல் போனதால் இவர் இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதைப் பற்றி பேசுகிறார் என நினைக்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சிகளில் காஷ்மீரின் அமைதியில்லை, வட கிழக்கு மாநிலங்களில் அமைதியில்லை. ஆனால், இப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய பின்னரும் கூட அங்கு அமைதி இருக்கிறது. அதேபோல் வடகிழக்கில் பிரிவினைவாத குழுக்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது ராகுல் காந்தி எந்த ஒற்றுமையை ஏற்படுத்த இந்த ஜோடோ யாத்திரையை மேற்கொள்கிறார் என நடத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது.

அப்புறம் ராகுல் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்... நாட்டில் ஏழை பணக்காரர்கள் இடைவெளி அதிகரித்துவிட்டது என்று. உண்மையில் கடந்த 8 ஆண்டுகளில் ஏழை, பணக்காரர்கள் இடையேயான இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளே இதற்கு சாட்சி" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இதே போல் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மாவும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை கிண்டல் செய்திருந்தார். “இந்தியா காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது தான் இரண்டாகப் பிரிந்தது. இப்போது இந்தியாவின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் பாகிஸ்தானில்தான் யாத்திரை செல்ல வேண்டும். மாறாக, இந்தியாவில் யாத்திரை மேற்கொள்வதால் என்ன பயன் வரும்? இந்தியா ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான்தான் பிரிந்து கிடக்கிறது. அதனால்தான் ராகுல் காந்தி பாகிஸ்தானில் யாத்திரை செல்ல வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x